பயங்கரவாதத்திற்கு நிதியுதவி: பாக்., அமைச்சர் ஒப்புதல்

16


இஸ்லாமாபாத்: பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்துள்ளோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் கூறியுள்ளார்.


பயங்கரவாதத்திற்கு ஆதரவும், நிதியுதவி அளிப்பதும் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இது குறித்து இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் அதனை பாகிஸ்தான் மறுத்தது. தற்போது, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என இந்தியா கூறியுள்ளது. ஆனால், வழக்கம்போல் பாகிஸ்தான் மறுத்துள்ளது.


இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு என்ற மோசமான வேலையை அமெரிக்காவுக்காக 3 தசாப்தங்களாக செய்தோம். பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்காகவும் செய்தோம். ஆனால், இது பெரிய தவறு. இதனால், பாகிஸ்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆப்கனில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போரிலும், இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலிலும் பாகிஸ்தான் பங்கு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement