டாக்டரை கேளுங்கள்

ஒருவேளை உணவாக பழங்கள் மட்டும் எடுப்பது சரியா.

- -மனோகரி, மதுரை

ஒருநேரம் பழங்களை மட்டுமே உணவாக எடுக்கும் பழக்கம் நமக்கு தேவை தான். ஏனென்றால் அவசரம் அவசரமாக உணவை உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகரித்து விட்டது. அதனால் தான் இந்த கேள்வியே எழுகிறது. நமக்கு வரும் வயிற்று பிரச்னைகளுக்கு உணவை அவசரமாக உண்பதும் ஒரு காரணம். நாம் உணவை சரியாக மென்று சாப்பிடாமல் அவசரமாக உண்பதால் வாயில் உள்ள சுரப்பிகள் சுரந்து செரிமானத்திற்கு உதவ முடிவதில்லை. பொதுவாக 5 முதல் 8 நிமிடங்களுக்குள் ஒருநேர உணவை சாப்பிட்டு முடிக்கின்றனர். அதனை 8 முதல் 13 நிமிடங்கள் வரை சாப்பிட்டு பாருங்கள். உணவை வாயில் தேக்கி வைத்து நன்றாக மென்று சாப்பிட்டால் உமிழ்நீர் சுரப்பிகள் சுரந்து செரிமானத்திற்கு உதவும். உண்மையில் செரிமானம் என்பது வாயில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதை புரிந்து கொண்டு நொறுங்கத் தின்றால் நுாறாண்டு வாழலாம்.

மூன்று நேரமும் நார்ச்சத்துள்ள, நீர்ச்சத்துள்ள உணவு, காய்கறி, பழங்கள் என சாப்பிட்டால் ஒருநேரம் பழங்கள் மட்டும் எடுக்க வேண்டும் என்ற அவசியம் வராது.

- டாக்டர் பி. ராஜேஷ்பிரபுவயிறு, இரைப்பை, கல்லீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை

வெயில் காலத்தில் வேர்வையால் ஏற்படும் அவதிகளை கட்டுப்படுத்த வழி என்ன.

- காயத்ரி, பழநி

வெயில் காலத்தை பொறுத்தவரை தோலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். வெயில் காலத்தில் வேர்வை அதிகளவில் வெளியேறும். சரியாக பராமரிக்காமல் இருந்தால் வேர்க்குரு, படை, சொறி சிரங்கு ஏற்படும். பூஞ்சை காளான் படை, சொரியாசிஸ் போன்றவை ஏற்கனவே உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர். காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளை துாய்மையாக பயன்படுத்த வேண்டும். ஆண்கள் ஜீன்ஸ் ஆடைகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். காற்றோட்டமாக உடலை பராமரிக்க வேண்டும்.

-டாக்டர் சங்கீதாபொது மருத்துவர், பழநி

சிறு குழந்தைகளுக்கு (5 வயதுக்கு கீழே) சளி, இருமல் எதனால் வருகிறது, வராமல் தடுப்பது எப்படி.

-- -கே.சிந்துஜா, போடி

புகை பிடிப்பவர்கள், சளி, இருமல், காசநோய் உள்ளவர்கள் குழந்தைகளை துாக்கி முத்தம் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு பரவுகிறது. இதனை தடுக்க குழந்தைகளுக்கு முன்பு இருமல், தும்மல் கூடாது. கைகளை நன்கு கழுவிய பின்பு குழந்தைகளை துாக்க வேண்டும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் ஏற்பட்டால் குறைந்தது 10 கிலோ எடை உள்ள குழந்தைகளுக்கு 120 மி.கி., பாரசிட்டமால் மாத்திரை 5 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் சளி டானிக் கொடுக்கலாம். இருமல், இளைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், பால் குடிக்காமல் இருப்பது, உடல் சுணக்கம் ஏற்படுவது போல் இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும். பிறந்தது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய ப்ளு தடுப்பூசி, நிமோனியா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவ அடிப்படையில் துாதுவளை, மிளகு, இஞ்சி சாறு சிறிதளவு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி சளி, இருமல், காய்ச்சல் வருவதை தடுக்கலாம்.

- -டாக்டர் எஸ். ரவீந்திரநாத்தலைமை மருத்துவ அதிகாரிஅரசு மருத்துவமனை, போடி

நெஞ்செரிச்சல், செரிமானம் இல்லாமல் அடிக்கடி அவதிப்படுகிறேன். இதற்கான தீர்வு என்ன.

- பாத்திமா பீவி, ராமநாதபுரம்

தற்போதைய உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டு அஜீரண கோளாறு காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. வயிற்றில் புண் ஏற்பட்டு உணவுக்குழாயில் பிரச்னை காரணமாக செரிமானக் கோளாறு ஏற்படுகிறது. பாஸ்ட் புட் உணவுகள், எண்ணெய், கார உணவுகளால் இந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு இயற்கை வகை உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எடைக்குறைப்பு செய்ய வேண்டும். இரவு உணவை துாங்குவதற்கு 3:00 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.

இரவு துாங்கும் போது தலைக்கு உயரம் தரும் வகையில் தலையணை வைத்து படுக்க வேண்டும். வயிற்றுக்கும், உணவுக் குழாய்க்கும் இடையே உள்ள வால்வு தளர்வாக இருந்தால் இது போன்ற செரிமானக்கோளாறு, நெஞ்செரிச்சல் ஏற்படும்.

- டாக்டர் எஸ்.சுரேந்திரன்பொது அறுவை சிகிச்சை மருத்துவர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைராமநாதபுரம்

பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏன் வருகிறது

- ம.சண்முகம், சிவகங்கை

ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு ஆரோக்கியமற்ற அல்லது நோயுற்ற ஈறுகளுக்கான அறிகுறி. இதற்கான காரணங்களை சரி செய்ய வேண்டும், பற்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். பொதுவாக பல் துலக்கும் போதோ அல்லது பல் இடுக்கை சுத்தம் செய்யும் போதோ ரத்தகசிவு ஏற்படலாம். ஈறுகள் வீக்கம் கடுமையாகும் போதும் அது கீழ் தாடை எலும்புகள் வரை செல்லும்போது ரத்தக் கசிவு அதிகமாகும்.

ஈறுகள் மற்றும் பற்கள் சந்திக்கும் இடங்களில் பிளேக் உருவாவதால் நோய்தொற்று ஏற்படுதல். பிரசவ காலத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கூட ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடு, நீரிழிவு நோயாலும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். ஆகையால் ரத்தக் கசிவு அடிக்கடி ஏற்பட்டால் முதலில் பல் டாக்டரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். எதனால் ரத்தகசிவு ஏற்படுகிறது என்று பரிசோதனை செய்யவேண்டும். அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

- டாக்டர் மரு.ஜெ.விஜயபாரத்அரசு மருத்துவர் தாலுகா மருத்துவமனைகாளையார்கோவில்

எனக்கு 26 வயதாகிறது கோடை காலத்தில் வெப்பம் குறையாததால் அடிக்கடி நீர் கடுப்பு, மலக்கட்டுவால் அவதிப்படுகின்றேன். குணமடைவதற்கு வழி என்ன.

- செந்தில்குமார், சிவகாசி

தற்போது காற்று அதிகம் அடிப்பதால் வெப்பச்சலனம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படுகின்ற நீர்க்கடுப்பு சரியாவதற்கு காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியே எங்கே சென்றாலும் கையில் தண்ணீர் கொண்டு சென்று அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். கிர்ணி பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், ஜூஸ் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் சாப்பிடலாம். மலக்கட்டு பிரச்னைக்கு தினமும் நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் கீரைகள் அதிகம் சாப்பிட வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பப்பாளி பழத்தினை தேனில் கலந்து சாப்பிடலாம்.

- -டாக்டர் மணிமேகலைசித்த மருத்துவர்இ.எஸ்.ஐ.. மருத்துவமனைசிவகாசி

Advertisement