கருகிய மிளகாய் செடிகளை கால்நடைகளை விட்டு அழிப்பு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வறட்சியால் கருகிய மிளகாய் செடிகளை கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு அழிக்கின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் தேவை இன்றி லேசான ஈரப்பதத்திலும், வறட்சியிலும் அதிக மகசூல் கொடுக்கும் என்பதால் மிளகாய் விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தினர்.

குறிப்பாக செங்குடி, வரவணி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், புல்லமடை, வல்லமடை, சவேரியார் பட்டினம், சிலுகவயல், இருதயபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியால் மிளகாய் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகள் வதங்கி கருகுகின்றன. தண்ணீர் பாய்ச்சுவதற்கான வசதி இல்லாத நிலங்களில் உள்ள மிளகாய்ச் செடிகள் பெரும்பாலும் கருகி மகசூல் முடிவுக்கு வந்து விட்டது.

கருகி வரும் மிளகாய் செடிகளை விவசாயிகள் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு விட்டு வயலில் உள்ள செடிகளை அழித்து வருகின்றனர். ஜூன் மாதம் வரை மகசூல் கொடுக்க வேண்டிய நிலையில் மிளகாய் மகசூல் முடிவுக்கு வந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement