அரசு மருத்துவமனையில் ரேடியோகிராபர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

பெரியகுளம் : பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் 'டிஜிட்டல் எக்ஸ்ரே' பிரிவில் ரேடியோகிராபர் பணியிடம் காலியாக உள்ளதால் நோயாளிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரம் பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இங்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளது.

இக்கருவி மூலம் தலை முதல் உள்ளங்கால்கள் வரை எலும்புமுறிவு பாதிப்புகளை துல்லியமாக அறியலாம். எக்ஸ்ரே எடுக்க தினமும் 150 பேர் வருகின்றனர்.

காலை 8:00 மணி இரவு 7:00 மணி வரை எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. ரூ.50க்கு எக்ஸ்ரே பிலிம் வழங்கப்படும். பிலிம் தேவை இல்லை என்றால் படத்தினை அவர்களது அலைபேசிக்கு இலவசமாக அனுப்பப்படும்.

இங்கு மூன்று ரேடியோகிராபர்கள் பணியிடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். இரு டெக்னீசியன், நான்கு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. கூட்ட நெரிசலில் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் நோயாளிகள் அடுத்த நாள் வந்து எக்ஸ்ரே எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. பணியாளர் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு உடனுக்குடன் எக்ஸ்ரே எடுத்து எலும்பு முறிவு பற்றி அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ இணை இயக்குனர் எக்ஸ்ரே பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காசநோய் மருத்துவ முகாம் செல்லும் ரேடியோகிராபர் முகாம் இல்லாத நாட்களில் மருத்துவமனையில் பணிபுரிய உத்தரவிட வேண்டும்.-

Advertisement