இணைய வழியில் மட்டுமே வரி வசூல்! கிராம ஊராட்சிகளுக்கு 'செக்'

திருப்பூர்;'கிராம ஊராட்சிகளில் அனைத்து வரியினங்களையும் இணைய வழியாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், வரி வசூலிப்பில் வேகம் காட்ட வேண்டிய நிலை ஊராட்சி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு என்பது, பெருமளவில் குறைந்துள்ள நிலையில், வரியினங்கள் வாயிலாக வருவாயை பெருக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி முகமை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை கடந்த காலங்களில், ஊராட்சி செயலர்களே வரி வசூலித்து வந்தனர். அதாவது, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வாங்கும் வரித் தொகைக்கு, ரசீது வழங்கி வந்தனர்.

பொதுவாக நடப்பாண்டு, மார்ச் இறுதிக்குள், நுாறு சதவீதம் வரி வசூல் பணியை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தினாலும், அதிகபட்சம், 70 முதல், 80 சதவீதம் அளவுக்கு மட்டுமே வரி வசூலிப்பு பணியை, ஊராட்சி செயலர்கள் நிறைவு செய்வர்; இருப்பினும், மனித ஆற்றல் வாயிலாகவே கணக்கெழுதப்படும் நிலையில், வரி வசூலிப்பு சதவீதத்தை கூடுதலாக காண்பித்து கொள்வர்.

ஆனால், கடந்த ஓராண்டாக 'ஆன்லைன்' வாயிலாகவே வரி வசூலிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், தினசரி வசூலிக்கப்படும் வரித் தொகை, 'ஆன்லைன்' வாயிலாக தானியங்கி முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகிறது. இதனால், வரி வசூலிப்பு சதவீதம் கணக்கு காட்டுவதில் எவ்வித 'சரிகட்டுதல்'களையும் செய்ய முடியாத நிலை, ஊராட்சி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, விடுபட்ட வரியினங்களை விரைவில் வசூலிக்க, ஊராட்சி நிர்வாகங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன.

Advertisement