லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடியில் கேபிள் 'டிவி' லைசென்ஸ் வழங்க உரிமையாளர் மலைக்கனியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மாரிமுத்துவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைக்கனி. இவர் 2013ல் மீனாட்சிபுரம், தெற்கு மீனாட்சிபுரம், கிறிஸ்துராஜபுரம் ஆகிய கிராமங்களில் கேபிள் 'டிவி' இணைப்புகள் கொடுக்க லைசென்ஸ் வழங்க கோரி விருதுநகர் மாவட்ட அரசு கேபிள் 'டிவி'நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தார். இதனை அப்போதைய தாசில்தார் சந்தன மாரியப்பன், வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து 59, ஆய்வு செய்தனர். பின்னர் லைசென்ஸ் வழங்குவதற்கு மலைக்கனியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி மாரிமுத்து கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மலைக்கனி, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

2013 ஏப்.5 அன்று காலை 11:00 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன அலுவலகத்தில் வைத்து மலைக்கனியிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை மாரிமுத்து லஞ்சமாக பெற்றுள்ளார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனால் ஏற்கனவே பணிநீட்டிப்பில் பணியாற்றி வந்த மாரிமுத்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் மாரிமுத்துவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வீரணன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார்.

Advertisement