'ட்ரோன்' உற்பத்தி நிறுவன தரவு திருட்டு? எஸ்.ஐ.டி., அமைத்தது உயர் நீதிமன்றம்!

பெங்களூரு: 'ட்ரோன்' உற்பத்தி நிறுவனத்தின் தரவுகளை, முன்னாள் ஊழியர்கள் திருடியதாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு, சககார நகரில், 'நியூ ஸ்பேஸ் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜிஸ்' என்ற தனியார் நிறுவனம் இயங்குகிறது. ட்ரோன் தயாரிப்பில் ஈடுபடும் இந்நிறுவனம், ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு ட்ரோன் விநியோகம் செய்து வருகிறது.

இந்நிறுவனத்தில் பணியாற்றும் பாவனா விஜயகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'எங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் ட்ரோன் உற்பத்தி தொடர்பான தகவல்களை திருடி, புதிதாக நிறுவனம் துவங்கி, வேறு சக்திகளுடன் சமரசம் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இதுபற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்து வருகிறார். நேற்றும் மனு மீது விசாரணை நடந்தது.

மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த குற்றச்சாட்டின் மூலம் தேசிய பாதுகாப்பு குறித்து கவலை அளிப்பதாக உள்ளது. சைபர் உளவு விசாரணைக்காக பயிற்சி பெற்ற அதிகாரிகளை வைத்து, இவ்வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்று கருதுகிறேன்.

இத்தகையை பெரிய குற்றங்களை அவர்கள் விசாரிப்பதில் நிறைய சிரமம் ஏற்படும்.

இதனால் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுகிறது. டி.ஜி.பி., பிரணாப் மொஹந்தி தலைவராக இருக்கும் குழுவில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குலாப் ராவ் போராஸ், நிஷா ஜேம்ஸ் இருப்பர்.

சைபர் குற்றங்களை தடுக்க, சைபர் கட்டளை மையங்களை அரசு அமைக்க வேண்டும். அந்த மையத்திற்கு உயிர் கொடுக்க அரசு முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement