அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!

9


சென்னை: ''குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.


கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவிற்கு செல்லும் போது எல்லாம், பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள் என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அந்தவகையில், இன்று சென்னையில் நடந்த கட்சி நிர்வாகி, மயிலை வேலு இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் பேசுகையில், ''குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள்'' என தெரிவித்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்து ஒருவர், ''குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழகத்தில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்'' என பதிவிட்டு இருந்தார்.



இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ''குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement