ரூ.2 ஆயிரம் கோடி ஊழல்; ஆம்ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு

5

புதுடில்லி: பள்ளி வகுப்பறை கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக, ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


டில்லியில் தற்போது பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேகா குப்தா செயலாற்றி வருகிறார். தற்போது, கடந்த ஆம்ஆத்மி ஆட்சி நடந்த போது 12,748 வகுப்பறைகள் கட்டுவதில் , ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த கட்டுமான ஒப்பந்தங்கள் ஆம்ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. செலவினங்களை அதிகரிப்பதற்காக, எந்த வகுப்பறைகளும் சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்படவில்லை என பல்வேறு ஊழல்கள் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.


ஊழல் வழக்கு




இது தொடர்பாக டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டில்லி முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் சிக்கல்கள்!




ஏற்கனவே, டில்லி மதுபான முறைகேடு வழக்கில், மணிஷ் சிசோடியா சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் இருக்கிறார். அதே நேரத்தில் சத்யேந்திர ஜெயின் பணமோசடி வழக்கில் விசாரணையில் உள்ளார்.

தற்போது, ஆம்ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது பதியப்பட்டு வழக்குகள், இவர்கள் எதிர்கொள்ளும் சட்ட சவால்களை அதிகரிக்கிறது.

பா.ஜ., விமர்சனம்



இதனால், ஆம் ஆத்மி கட்சி மீதான தனது விமர்சனத்தை பா.ஜ., தீவிரப்படுத்தியுள்ளது. டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் ஆய்வு நடத்த பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement