பஹல்காம் விவகாரம் தேவகவுடா ஆதரவு

பெங்களூரு: பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக, முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், எனக்கு வேதனை அளிக்கிறது. சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.

இதற்கு பாகிஸ்தான் ஆதரவு இருப்பதாக, மத்திய அரசிடம் தகவல் உள்ளது. இவ்விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை 140 கோடி இந்தியர்களும் ஆதரிக்க வேண்டும். மத்திய அரசுக்கு, எங்கள் கட்சியும் முழு ஆதரவு அளிக்கிறது.

பஹல்காம் சம்பவத்திற்கு பின், பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் பேசவில்லை. அவர் என்னிடம் பேச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தேவைப்பட்டால் நானே அவருக்கு கடிதம் எழுதுவேன்.

மோடிக்கு உலக தலைவர்கள் மத்தியில் மரியாதை உண்டு. பஹல்காம் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரதமர் எடுக்கும் முடிவில் யாரும் அரசியல் செய்ய கூடாது. குற்றவாளிகளை அடையாளம் கண்டு கடுமையாக தண்டிக்க வேண்டும். பஹல்காம் சம்பவத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்பதாக, காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். அவர்களது வார்த்தைகள் பயனற்றவை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement