பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கு பெண் வக்கீலை நியமித்தார் நீதிபதி

பெங்களூரு: பாலியல் வழக்கில் தனக்காக வாதாட வக்கீலை முன்னாள் எம்.பி., பிரஜ்வல் நியமிக்காததால், பெண் வக்கீலை நீதிமன்றமே நியமித்துள்ளது.

ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 34. பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் உள்ளார். மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், பிரஜ்வல் தொடர்பான வழக்கு விசாரணை நடக்கிறது.

இவருக்காக ஆஜராகி வந்த வக்கீல் அருண், தன் தொழிலில் இருந்து, ஓய்வு பெறுவதாக கூறி கடந்த ஜனவரியில், நீதிபதி சந்தோஷ் கஜானா பட்டிடம் கடிதம் கொடுத்தார்.

'உங்களுக்காக வாதிட புதிய வக்கீலை நியமித்துக் கொள்ளுங்கள்' என பிரஜ்வலுக்கு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிரஜ்வல் எந்த முயற்சியும் செய்யவில்லை.

இதற்கிடையில் இந்த வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரஜ்வல் தரப்பில் அவரது தாய் பவானி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. மே 2ம் தேதிக்குள் புதிய வக்கீலை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக, மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அத்துடன் நேற்றுக்குள் புதிய வக்கீலை நியமிக்கும்படி கெடு விதித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது, “உங்கள் சார்பில் வாதிட புதிய வக்கீலை நியமித்து விட்டீர்களா?” என, பிரஜ்வலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, “இல்லை. கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்,” என பிரஜ்வல் கேட்டார்.

இதை கேட்டு கடும் கோபம் அடைந்த நீதிபதி, “விசாரணையை இன்னும் எத்தனை முறை தள்ளி போடுவீர்கள்?,” என்று கேட்டார்.

பின், “நாங்களே உங்களுக்கு வக்கீலை நியமிக்கிறோம்,” என்று கூறி, இலவச சட்ட சேவையின் கீழ் பிரஜ்வலுக்காக வாதிட வக்கீல் ஜெயஸ்ரீயை, நீதிபதி நியமித்து உத்தரவிட்டார்.

“இரண்டு மாதங்களுக்குள் இந்த வழக்கு விசாரணையை முடித்துக் காட்டுகிறேன்,” என காட்டமாக கூறியதுடன், மனு மீதான அடுத்த விசாரணையை மே 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement