பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி

2

புதுடில்லி: பஹல்காம் தாக்குதல் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய புள்ளி பெரும் பங்கு வைத்திருப்பது என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.



26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் மற்றும் அவர்களுக்கு உதவியதாக கூறப்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


பாண்டிபோரா, சோபியான், புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கினர். இந் நிலையில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தொடர்பு தாக்குதலில் இருப்பதை உறுதி செய்துள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள் அடுத்தக்கட்ட விசாரணையை நோக்கி நகர்ந்துள்ளனர்.


அவர்களின் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன்படி, பஹல்காம் தாக்குதலில் முக்கிய பங்கு வைத்திருப்பது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய புள்ளியான பரூக் அகமது என்பது தெரிய வந்திருக்கிறது.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவன் பதுங்கி உள்ளான். ஸ்லீப்பர் செல் நெட்வொர்க் மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி உள்ளான். அதில் பஹல்காம் தாக்குதல் சம்பவமும் அடக்கம்.


காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல கடினமான பாதைகளை நன்கு அறிந்து வைத்துள்ளவன். பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதில் முக்கிய பங்கு இவனுக்கு உள்ளது.


மேலும் பல்வேறு நவீன தகவல் தொழில்நுட்ப செயலிகள் மூலம் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தே தொடர்பு கொண்டு சதி திட்டங்களை அரங்கேற்றியவன்.


இவ்வாறு என்.ஐ.ஏ., நடத்திய பலகட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement