நிழல் உலக தாதாவுக்கு 15 நாட்கள் 'பரோல்'

பெங்களூரு: தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா பன்னஞ்ஜே ராஜாவுக்கு, உயர் நீதிமன்றம் 15 நாள் பரோல் வழங்கியுள்ளது.

உடுப்பி, மல்பேயை சேர்ந்தவர் பன்னஞ்ஜே ராஜா. நிழல் உலக தாதாவான இவர் மீது கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொழிலதிபர் ஒருவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது தந்தை சுந்தர் ஷெட்டிகர், 86, நேற்று முன்தினம் இறந்தார். தந்தையின் இறுதிச் சடங்கு, அதை தொடர்ந்து நடக்கும் சடங்குகளில் கலந்து கொள்ள, பரோலில் செல்ல அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் பன்னஞ்ஜே ராஜா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா நேற்று விசாரித்தார்.

மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ராகுல் கரியப்பா முன்வைத்த வாதம்:

மனுதாரர் மீது 23 வழக்குகள் உள்ளன. பல வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு உள்ளார். ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும் அனுபவித்து வருகிறார். இத்தகையவருக்கு பரோல் கொடுக்க வேண்டுமா என்பதை, நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை அவர் பரோலில் சென்றாலும், நான்கு போலீசார், ஒரு எஸ்கார்ட் வாகனத்தையும் அனுப்ப வேண்டும். இதற்கான செலவை மனுதாரர் ஏற்க வேண்டும்.

இவ்வாரு அவர் கோரினார்.

மனுதாரர் தரப்பு வக்கீல் சிராஜுதீன் அகமது வாதிடுகையில், ''இறந்த தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வது மகனின் கடமை. அந்த கடமையை நிறைவேற்ற மனுதாரர் நினைக்கிறார். இதில் தவறு இல்லை. போலீஸ், எஸ்கார்ட் வாகன செலவை செலுத்தவும் தயாராக உள்ளார்,'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ''அரசு விதிப்படி, மனுதாரர் எஸ்கார்ட் பாதுகாப்புக்கு பணம் செலுத்த வேண்டும். இது தான் உங்கள் விதி. இதில் எதுவும் செய்ய முடியாது,'' என்றார்.

பன்னஞ்ஜே ராஜாவை 15 நாட்கள் பரோலில் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார்.

Advertisement