மரங்களை வெட்ட பலத்த எதிர்ப்பு

பெங்களூரு: பெங்களூரு கன்டோன்மென்ட ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள், 480 கோடி ரூபாய் செலவில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன.

2,000 வாகனங்கள் நிறுத்துவதற்காக ரயில் நிலைய வளாகத்தில் பல நுாறு ஆண்டுகளாக உள்ள ரப்பர் உட்பட 368 மரங்களை வெட்டுவதற்கு, ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டது.

இதற்காக பெங்களூரு மாநகராட்சியின் வனப்பிரிவிடம் அனுமதி கோரியது. இத்திட்டத்திற்கு பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவிக்க கடந்த வெள்ளிக் கிழமையன்று, மாநகராட்சி துணை வனப்பாதுகாவலர் சுவாமி 10 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், பொது மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல தரப்பினரும் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

பல்லுயிர் மேலாண்மை குழு உறுப்பினர் விஜய் நிஷாந்த் எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கூறியதாவது:

'கன்டோன்மென்ட் பாரம்பரிய மரங்களை காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பில் பிரசாரம் துவங்கப்படும். மேலும், மாநகராட்சி வனப்பிரிவு தலைவரின் மின்னஞ்சல் கணக்கு, ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்குக்கு, மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து தகவல் அனுப்புங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement