பல்லடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேச ஆசாமி; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

22


திருப்பூர்: பல்லடம் அருகே நிதி நிறுவனத்தால் 7 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அதன் உரிமையாளர் சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


பல்லடம் அருகே வசித்து வந்த சயன்,40, மற்றும் கீதா,36, ஆகிய தம்பதி, நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சம் கடன்பெற்று, வீடுகள் கட்டி, அதனை வாடகைக்கு விட்டிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக முறையாக தவணை தொகையை செலுத்தி வந்த நிலையில், சயனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.


இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், தவணைத் தொகையை முறையாக அடைக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு 4 மாத கடன் தொகையை செலுத்தியும், அந்தத் தொகை செயலாக்க கட்டணத்திற்கு சரியாவிட்டதாகக் கூறிவிட்டனர். எனவே, கடன் தொகையை செலுத்துமாறு கூறி, அவரது வீட்டிற்கு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சென்றனர்.


மேலும், வீடுகளை ஜப்தி செய்வதாகக் கூறி 6 வீடுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால், அதிர்ந்து போன கீதா, எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


இதனிடையே, சீல் வைக்கப்பட்ட வீடுகளில் வாடகைக்கு குடியிருந்தவர்கள், இது குறித்து பல்லடம் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.


விசாரணையின் முடிவில், திடீர் திருப்பமாக சீல் வைக்கப்பட்ட வீடுகளின் உரியைமாளர் சயனை, சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சயன் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 20 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது.


திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட சயன், மனைவியின் ஆவணங்கள் மூலம் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். மேலும், குடியுரிமை பெறுவதற்கு ரூ.15 லட்சம் வரை செலவழித்தும் கிடைக்கவில்லை என்று சயனே வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement