கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்; மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு!

17

கடலூர்: கள்ள நோட்டு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மா.ஜி., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செல்வம் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் ஆறு பேரும் போலீசாரிடம் சிக்கினர்.


கடலூர் திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், வயது 39. விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச்சில் ராமநத்தம் போலீசார் சோதனை நடத்தினர்.


அப்போது தோட்டத்து வீட்டில் இருந்த செல்வம் போலீசை கண்டு தப்பி ஓடினார். கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வாக்கி டாக்கிகள், அச்சடிக்கும் பேப்பர், 83,000 ரூபாய் ரொக்க பணம் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ராமநத்தம் செல்வம் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.


இதையடுத்து செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
இது ஒரு புறம் இருக்க கள்ளநோட்டு கும்பலை சுற்றிவளைக்க கடலூர் போலீசார் தீவிரம் காட்டினர்.


சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் தலைமறைவாக இருந்த செல்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து செல்வத்தின் உறவினர்களை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர்.


செல்வத்தின் உறவினர் ஒருவர் அடிக்கடி கர்நாடகாவில் உள்ளவர்களுடம் பேசி வருவது தெரியவந்தது. விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் செல்வம் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர்.

கர்நாடகா விரைந்த தமிழக போலீசார் அங்கு பதுங்கி இருந்த செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement