ரியல் எஸ்டேட் மோசடியில் ஈடுபட்டவர் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில், ரியல் எஸ்டேட் பெயரில் 1,000 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஷைன் சிட்டி குழும உரிமையாளரும், முக்கியக் குற்றவாளியுமான ரஷித் நசீமை, தேடப்படும் குற்றவாளியாக லக்னோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஷைன் சிட்டி என்ற பெயரில், ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

பரிசுகள்



இதில், முதலீடு செய்பவர்களுக்கு, பணம் இரட்டிப்பாக்கி தரப்படும் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை நம்பி ஏராளமானோர் ஷைன் சிட்டி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

அறிவித்தது போல், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தரவில்லை.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகாரளித்தனர். மொத்தம் 1,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.

ரியல் எஸ்டேட் முதலீடுகள் என்ற போர்வையில் நிதி திரட்டப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சேகரிக்கப்பட்ட நிதி, ஷைன் சிட்டி நிறுவனங்கள், அதன் இயக்குநர்கள் மற்றும் பல நெருங்கிய கூட்டாளிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நாடு முழுதும் 18 இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, சம்பந்தப்பட்டவர்களின் 263 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது.

மோசடியில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், முக்கிய குற்றவாளியான ஷைன் சிட்டி குழும உரிமையாளர் ரஷித் நசீம் மாயமானார். அவர், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாயமான அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்தாண்டு முறையிட்டது.

இதையடுத்து, ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட், லுக் - அவுட் சுற்றறிக்கை மற்றும் 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசாரின் ரெட் நோட்டீஸ் உத்தரவு போன்றவை ரஷித்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டன.

வழக்கு பதிவு



இருப்பினும், குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவர் இந்தியா திரும்ப மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

அவருக்கு மேலும் 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. அவரிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரஷித் நசீமை தேடப்படும் குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதை அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இவர் மீது 550க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement