கொலை வழக்கு: இந்தியருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்

5


ஆமதாபாத்: கொலை வழக்கில் இந்தியர் ஒருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


குஜராத்தின் கேடா மாவட்டத்தின் கபாட்வான்ஜ் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாகிம் பதியாரா(38). பஹ்ரைன், துபாயில் சமையல் பணியில் ஈடுபட்டு வந்தார். ராஜஸ்தானை சேர்ந்த தம்பதி , கடந்த ஏழு ஆண்டுகளுக்கு இவரை குவைத்தில் உள்ள முஸ்தபா கான் மற்றும் ரெஹானா கான் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டனர்.


கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ரெஹானா கானுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அவரை முஸ்தாஹிம் கொலை செய்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2021ம் ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த 28 ம் தேதி முஸ்தாஹிமுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து விமானம் மூலம் முஸ்தாகிம் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement