செஸ்: இந்தியா-அமெரிக்கா மோதல்

புதுடில்லி: இந்தியா, அமெரிக்க நட்சத்திரங்கள் பங்கேற்கும் 'செக் மேட்' போட்டி அமெரிக்காவில் நடக்கவுள்ளது.
செஸ் உலகின் முதன் முறையாக இரு நாடுகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இருதரப்பு கிரிக்கெட் போன்ற இப்போட்டியில் செஸ் உலகின் வலுவான இந்தியா-அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. 'சேக் மேட்' என பெயரிடப்பட்ட இப்போட்டி வரும் அக்டோபர் 4ல், அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள 1 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட, இஸ்போர்ட்ஸ் மைதானத்தில் (ஆர்லிங்டன்) நடக்க உள்ளது.
2500 பேர் நேரடியாக இதை கண்டு ரசிக்கலாம். போட்டிகள் 90 அடி உயரமான ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பாகும். வழக்கமாக செஸ் அரங்கில் நிலவும் அமைதி போல இல்லாமல், உற்சாகத்துடன் பார்க்கலாம்.
இந்திய அணிக்கு உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்க அணிக்கு உலகின் 'நம்பர்-2' ஹிகாரு நகமுரா தலைமை ஏற்கின்றனர். மொத்தம் 5 போட்டி நடக்கும். ஒவ்வொரு போட்டியிலும் இருவருக்கும் தலா 10 நிமிடம் தரப்படும். ஒருவேளை 'டிரா' ஆனால், அடுத்து 5 நிமிடம், 1 நிமிடம் கொண்ட போட்டியாக, முடிவு கிடைக்கும் வரை நடத்தப்படும்.
போட்டியை நடத்தும் நாடு என்பதால், அமெரிக்க நட்சத்திரங்கள், 5 போட்டியிலும் வெள்ளை நிற காய்களுடன் விளையாடுவர். முதல் போட்டியில் இந்தியாவின் குகேஷ்-அமெரிக்காவின் நகமுரா மோதுவர். அதைத் தொடர்ந்து அர்ஜுன்-பேபியானா காருணா, சாகர் ஷா-லெவி ரோஸ்மன், திவ்யா-காரிஸ்சா, ஈதன் வாஸ்-அடீவ்யுமி மோத உள்ளனர். இதன் பின் இரு அணிகள் மோதும் போட்டி இந்திய மண்ணில் நடத்தப்பட உள்ளது.

Advertisement