பிராட்மேன் போல பும்ரா * கில்கிறிஸ்ட் பாராட்டு

புதுடில்லி: ''ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அசத்துகிறார் பும்ரா,'' என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 31. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட் சாய்த்து மிரட்டினார். 2024ல் பங்கேற்ற மூன்று வித போட்டிகளில் 84 விக்கெட் சாய்த்தார்.
தற்போது மும்பை அணிக்காக கடந்த இரு போட்டியில் 6 விக்கெட் சாய்த்த பும்ரா, ஒட்டுமொத்த பிரிமியர் தொடரில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் 7வது (140 போட்டி, 176 விக்.,) இடத்தில் உள்ளார். இவர் குறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் கூறியது:
கிரிக்கெட்டில் அனைத்து காலத்திலும் சிறந்த பவுலராக, வேகப்பந்து வீச்சாளராக பும்ரா இருக்கலாம். ஏனெனில் உலகின் பல்வேறு மாறுபட்ட சூழ்நிலையிலும் பும்ரா தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன், பேட்டிங் சாதனைகள் முன்னிலையில் இருக்கும்.
இதுபோல, வெவ்வேறு வித்தியாசமான ஆடுகளங்கள், சூழ்நிலையில், பும்ராவின் பந்துவீச்சு அசத்தலாக இருக்கும். இதை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பவுலர்களை கண்டு அச்சப்படுவது இல்லை. ஆனால் 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பும்ரா பவுலிங்கை பார்த்து அஞ்சினர். இதை அருகில் இருந்து பார்த்தேன்.
தற்போதுள்ள மற்ற வீரர்களை விட பும்ரா, தனித்துவமாக திகழ்கிறார். உண்மையில் சிறந்த 'ஜாம்பவான்' ஆட்டத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement