சருகு மான்கள் வேட்டையாடிய கூலித்தொழிலாளி கைது ராணுவ வீரர் தலைமறைவு

போடி: தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி கல்லாற்று ஓடைப் பகுதியில் துப்பாக்கியால் சருகு மான்களை சுட்டு வேட்டையாடிய கூலித்தொழிலாளி கண்ணனை 55, கைது செய்த வனத்துறையினர், தப்பி ஓடிய ராணுவ வீரர் பாக்யராஜை 40, தேடிவருகின்றனர்.

போடி ரேஞ்சர் நாகராஜ் தலைமையில் வனவர்கள் அன்பரசன், கனிவர்மன், வனக்காப்பாளர் விஜய் ஆனந்த், வேட்டை தடுப்புக் காவலர் சுகந்தன் ஆகியோர் குரங்கணி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

கல்லாற்று ஓடைப் பகுதியில் வனத்துறையினரை பார்த்ததும் குரங்கணி நரிப்பட்டி ராணுவவீரர் பாக்யராஜ், கூலித் தொழிலாளி கண்ணன் தப்பி ஓட முயன்றனர்.

ராணுவ வீரரை ஓட விடாமல் தடுத்த வேட்டை தடுப்புக் காவலர் சுதர்சன் தாக்கப்பட்டார்.

இரட்டை குழல் துப்பாக்கியை காண்பித்து சுட்டுக் கொலை செய்து விடுவதாக மிரட்டி, ராணுவ வீரர் தப்பி ஓடி விட்டார். அங்கு இருந்த கண்ணனை வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கல்லாற்று ஓடைப் பகுதியில் ஒரு வயது உள்ள 2 சருகு மான்களை இரட்டை குழல் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரிந்தது.

மான்களின் உடல்கள், ராணுவவீரர் விட்டுச் சென்ற கார், தோட்டாக்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து ராணுவ வீரர் பாக்யராஜை தேடி வருகின்றனர்.

Advertisement