'யு' வடிவ மேம்பாலத்தில் ஏற திணறும் கனரக வாகனங்கள்
சென்னை: திருவான்மியூர், தரமணி, மத்திய கைலாஷ், துரைப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் சந்திப்பாக டைடல் பார்க் உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள் உள்ளதால், இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம்.
நெரிசலை தடுக்க, திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., சாலை நோக்கி வாகனங்கள் செல்லும் வகையில், 18 கோடி ரூபாயில், 'யு' வடிவ மேம்பாலம் கட்டி, கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது.
இந்த மேம்பாலம் அருகில், திருவான்மியூர் - தரமணி மேம்பால ரயில் தண்டவாளம், ஓ.எம்.ஆர்., குறுக்கே செல்கிறது.
முதலில் யு வடிவ மேம்பாலம், ரயில் தண்டவாளத்தை கடந்து, பேஷன் டெக்னாலஜி அருகில் அமைப்பதாக இருந்தது.
அங்கு, மெட்ரோ ரயில் சுரங்க ரயில் நிலையம் மற்றும் சுரங்கத்தில் இருந்து, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் சந்திப்பு சாலையில் ஏறும் பகுதி உள்ளதால், அங்கு மேம்பாலம் அமைக்கவில்லை.
தற்போது கட்டிய மேம்பாலத்தில், திருவான்மியூரில் இருந்து ஏறி செல்ல, பகிங்ஹாம் கால்வாயில் பில்லர் அமைத்து நேராக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
ஆனால், பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் தடைபடும் என, பில்லர் அமைக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. இதனால், வளைவாக சென்று மேம்பாலத்தில் ஏறும் வகையில் வடிவமைத்து, தற்போது கட்டப்பட்டு உள்ளது.
பாலம் திறந்த பின், மத்திய கைலாஷில் இருந்து மேம்பாலம் ஏறி செல்லும் வாகனங்கள், வேகமாக செல்கின்றன.
ஆனால், திருவான்மியூரில் இருந்து மேம்பாலம் ஏற, வளைந்து செல்ல வேண்டி உள்ளது. அதனால், வேகத்தை குறைத்து மேம்பாலத்தில் ஏற கனரக வாகனங்கள் திணறுகின்றன.
அதேபோல், மேம்பாலத்தின் மைய பகுதியில் இருந்து, சி.எஸ்.ஐ.ஆர்., மற்றும் மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் பாதைக்கு, எப்படி செல்ல வேண்டும் என தெரியாமல், சில வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.
அப்போது, வாகனத்தின் வேகத்தை குறைத்து செல்வதால், பின்னால் ஏறி வரும் கனரக வாகனங்கள் வேகம் குறைந்து, பல நேரம் மேம்பாலத்திலேயே நின்று விடுகின்றன.
இதனால், திருவான்மியூரில் இருந்து மேம்பாலம் செல்லும் பாதையில் நெரிசல் ஏற்படுகிறது.
சாலை மேம்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:
மேம்பாலத்தை, 20 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளோம். திருவான்மியூரில் இருந்து வளைந்து மேம்பாலம் ஏறுவதால், குடிநீர் லாரி உள்ளிட்ட சில கனரக வாகனங்கள் திணறுகின்றன.
வளைவு பகுதியில் சில பாதசாரிகள் குறுக்கே செல்வதாலும், வாகனங்களின் வேகம் குறைகிறது. டைடல் பார்க் மெட்ரோ சுரங்கப்பாதை பணி முடிந்தால், வளைவு பகுதி அகலப்படுத்தப்படும். அப்போது, இதுபோன்ற பிரச்னை இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை