குப்பை கொட்டுமிடமாகும் போத்தம்பட்டி கண்மாய்

உசிலம்பட்டி :குப்பையால் நிரம்பும் போத்தம்பட்டி கண்மாயை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் நல்லுத்தேவன்பட்டி, பண்ணைப்பட்டி, போத்தம்பட்டி கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது போத்தம்பட்டி கண்மாய். முப்பது எக்டேர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 40 எக்டேர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீராதாரமாகவும் இக்கண்மாய் உள்ளது.

மழை மற்றும் அசுவமாநதியின் மூலம் பாசனம் பெறும் இந்த கண்மாய் 6.18 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டது. இந்த கண்மாய் நிரம்பி மறுகால் செல்லும் நீர் வகுரணி கண்மாய்க்குச் செல்லும். பேரையூர் ரோட்டோரம் நீண்ட கரையைக் கொண்ட இந்த கண்மாயில் சில ஆண்டுகளாக தொடர்ந்து குப்பையை கொட்டி வருகின்றனர்.

உசிலம்பட்டி நகர் பகுதியின் கோழிக்கழிவுகள், பயனற்ற பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்து கண்மாய் பள்ளத்தில் கொட்டிச் செல்கின்றனர். ரோட்டில் இருந்து 8 அடி வரை பள்ளம் உள்ள இந்தப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டியுள்ளதால் குப்பையை கொட்டியிருப்பதே வெளியில் தெரியாமல் போகிறது.

கண்மாய் நீரில் மட்கும் குப்பையால் இந்தப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதிகாரிகள் இந்தப்பகுதியில் குப்பை, கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Advertisement