அணிகளில் கோலோச்சும் நிர்வாகிகளின் உறவுகள்; மதுரை நகர் தி.மு.க.,வில் தொண்டர்கள் புலம்பல்

மதுரை: மதுரையில் தி.மு.க., அணிகள் பிரிவில் நிர்வாகிகள், உறவினர்களுக்கு பதவிகள் தாரை வார்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காலியான பதவிகளிலும் உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக தொண்டர்கள் புலம்புகின்றனர்.

தி.மு.க.,வில் இளைஞரணி, தொண்டரணி, மருத்துவரணி, மகளிரணி, நெசவாளர், வர்த்தகர், மீனவர், இலக்கிய என 23 அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணிக்கும் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிகள் உள்ளன. இவ்வகையில் மட்டுமே ஒரு மாவட்ட செயலாளர் கட்டுப்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணி நிர்வாகிகள் இருப்பர்.

அணிகளில் உள்ள பதவிகள் பெரும்பாலும் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர்கள், அவைத் தலைவர், மாநில அமைப்புகளில் உள்ள நிர்வாகிகளின் மாமன், மச்சான் என உறவுகள் சார்ந்தே இப்பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். மதுரை நகர் தி.மு.க.,விலும் அதே நிலைமை தான்.

தற்போது நகர் தி.மு.க.,வில் இடம் பெற்றிருந்த மேற்கு சட்டசபைத் தொகுதி, சமீபத்தில் மதுரை வடக்கு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் நகர் தி.மு.க.,வுக்குட்பட்ட பகுதியில் கூடுதல் அணி நிர்வாகிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதிலும் மாவட்ட, துணை பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளின் உறவினர்களே பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு அணிகள் பதவிகள் வழங்கினால் தான் கட்சி வலுப்பெறும். பெரும்பாலும் அவ்வாறு பதவி கொடுக்கப்படுவதில்லை. உறவினர்களை நியமிக்கின்றனர் அல்லது நிர்வாகிகள் 'சிபாரிசு' செய்பவர்கள் பதவிக்கு வருகின்றனர். இதனால் அணிகள் கூட்டத்தின்போது போதிய நிர்வாகிகள் பங்கேற்பதில்லை. பல ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்தும் இதுபோன்ற அணிகள் பதவிக்கு கூட வரமுடியவில்லை. ஏற்கனவே வட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் கட்சித் தலைமை இதுகுறித்து கவனத்தில்கொள்ள வேண்டும் என்றனர்.

Advertisement