பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!

புதுடில்லி: ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் கவுரவத்தையும் பாதுகாக்க வேண்டும் என வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷிக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு அளித்துள்ளது.



பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, “இஸ்லாமியர்கள் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம்” என்று பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி உருக்கமாக தெரிவித்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் ஹிமான்ஷிக்கு ஆதரவாக தேசிய மகளிர் ஆணையம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நாட்டின் பல குடிமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில், கடற்படை வீரர் வினய் நர்வால் மற்றும் பிறருடன், அவரது மதம் குறித்து கேட்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலால் முழு நாடும் வேதனையும் கோபமும் அடைந்துள்ளது.



வினய் நர்வாலின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ஹிமான்ஷி நர்வாலின் ஒரு அறிக்கை தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் குறிவைக்கப்படும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் அவரை கேலி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.


கருத்து தெரிவிக்கும் போது கண்ணியத்துடனும், அரசியலமைப்பு வரம்புகளுக்குள்ளும் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் கவுரவத்தையும் பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையம் உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement