ஹாேட்டலில் வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி வைரத்துடன் தப்பிய 4 பேர் கைது

5


சென்னை வடபழனியில், நட்சத்திர ஹாேட்டலுக்கு வரவழைத்து, வியாபாரியை கட்டிப்போட்டு, 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கற்களை கொள்ளையடித்து, துாத்துக்குடிக்கு தப்பிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த வைர வியாபாரி சந்திரசேகர், 69; இவர், மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், தன்னிடம் விற்றுத் தருமாறு கூறிய, 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கற்கள் இருப்பதாக, இடைத்தரகர்களான வில்லிவாக்கம் ராகுல், 30; மணலி ஆரோக்கியராஜ், 30; சைதாப்பேட்டை சுபன், 45 ஆகியோரை சந்தித்து சொன்னார்.

அவர்கள் ஏற்பாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜான் லாயிட் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் காலை சந்திரசேகர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

வைர கற்களை விலை பேசி முடித்துள்ளனர். 'நாங்கள், வடபழனியில் உள்ள நட்சத்திர ஹாேட்டல் ஒன்றில் தங்கி உள்ளோம். நீங்கள் வைர கற்களுடன் அங்கு வந்து விடுங்கள். அதை கொடுத்து விட்டு பணத்தை வாங்கிச் செல்லுங்கள்' என, கூறியுள்ளனர்.

Latest Tamil News

சந்தேகம்



இதையடுத்து, மகள் ஜானகி, 30, புதுக்கோட்டையை சேர்ந்த நண்பர் சுப்பிரமணியன், 56, கார் ஓட்டுநர் ஆகாஷ், 27 ஆகியோருடன் நட்சத்திர ஹாேட்டலுக்குச் சென்றுள்ளார் சந்திரசேகர். வைர கற்களை வாங்கிக் கொள்வதாக கூறிய நபர்கள், ஜானகியை ஹாேட்டல் வரவேற்பு அறையில் அமரச் சொல்லி விட்டனர்.

சந்திரசேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோரை தாங்கள் தங்கி இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றனர்.


நைசாக பேச்சு கொடுத்து, சுப்பிரமணியனிடம், டீ குடித்து விட்டு வருமாறு கூறியுள்ளனர். அவர் திரும்பி வருவதற்குள் சந்திரசேகரை கயிற்றால் கட்டிப்போட்டு வைர கற்களை கொள்ளை அடித்து தப்பி விட்டனர்.


வெளியில் சென்ற சுப்பிரமணியனும் வெகுநேரமாகியும் ேஹாட்டலுக்கு திரும்பவில்லை. சந்திரசேகரும் வரவேற்பு அறைக்கு வரவில்லை. இதனால், ஜானகிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால், ேஹாட்டல் ஊழியர்கள் உதவியுடன், அந்த நபர்கள் தங்கி இருந்த அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தந்தை சந்திரசேகர் கயிற்றால் கட்டிப் போடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து, வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து சந்திரசேகரை மீட்டனர். கொள்ளை குறித்து, மாநிலம் முழுதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

விசாரணை



தனிப்படை போலீசாரின் விசாரணையில், கொள்ளையர்கள் துாத்துக்குடிக்கு தப்பிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, துாத்துக்குடி மாவட்டம், புதுார் பாண்டியாபுரம் சோதனை சாவடியை, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, கொள்ளையர் சென்ற ஜீப் கடக்க முயன்றபோது, போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஜீப்பில் இருந்த, திருநெல்வேலியை சேர்ந்த ஜான் லாயட், 34, சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், 24, திருவேற்காட்டை சேர்ந்த ரதீஷ், 28, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், 35, ஆகியோரை பிடித்து, சென்னை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் இருந்து, வைர கற்கள் மீட்கப்பட்டன.




- நமது நிருபர் -

Advertisement