நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!

61

புதுடில்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில், குறிப்பிட்ட ஒரு ஜாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற பிரசாரம் பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில், 'கொலீஜியம்' பரிந்துரை மற்றும் நீதிபதிகளின் நியமனங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.



உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வது, இடமாறுதல் செய்வது போன்றவற்றை, 'கொலீஜியம்' எனப்படும் மூத்த நீதிபதிகள் கொண்ட குழு முடிவு செய்கிறது.


இந்த குழு, எவ்வாறு விவாதிக்கிறது, என்ன அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்கிறது என்பது பற்றிய விவரங்கள் இதுவரை வெளியானதில்லை.


இதனால் கொலீஜியம் நடைமுறை பற்றி அவ்வப்போது புகார் எழுவது வழக்கம். மேல் ஜாதியினர் ஆதிக்கம் இருப்பதாகவும், நீதிபதிகள் தங்கள் உறவினர்களையே நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்வதாகவும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.


இதற்கு முடிவு கட்டும் வகையில், நீதிபதிகள் நியமனத்துக்கான பரிசீலனை செய்யப்பட்ட பெயர்கள், கொலீஜியம் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் சமீப ஆண்டுகளில், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.


கடந்த 2022 நவம்பர் 9 முதல் இதுவரையிலான இரண்டரை ஆண்டு காலத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 406 பேருடைய பெயர்கள், கொலீஜியம் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டன.

இதில், 221 பேர் பணி நியமனம் செய்வதற்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இவர்களில், 192 பேர் நியமனம் செய்யப்பட்டனர்; மீதமுள்ள 29 பேர் பெயர்கள், நிலுவையில் உள்ளன. இப்படி நியமிக்கப்பட்ட 192 நீதிபதிகள் எந்தெந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.


இவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் 4 சதவீதம் பேர். பழங்குடியினர் 3.6 சதவீதம் பேர். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 16 சதவீதம் பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 3.6 சதவீதம் பேர். பெண்கள் 17.5 சதவீதம் பேர். சிறுபான்மையினர் 15.9 சதவீதம் பேர் இருப்பது தெரியவந்துள்ளது.


இந்த விவரங்கள், உயர் நீதித்துறையானது, மேல் ஜாதியினர் ஆதிக்கம் செலுத்தும் இடம் என்ற பெரும்பாலானோரின் எண்ணத்தை பொய்யாக்குவதாக உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களில் 32 சதவீதம் பேர் மட்டுமே பொதுப்பிரிவினர்.


மொத்தம் நியமிக்கப்பட்ட 192 நீதிபதிகளில், 7.2 சதவீதம் பேர் மட்டுமே, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர்கள் என்ற விவரமும் வெளிப்படையாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த நவம்பர் 2024 மே 5 முதல் (சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம்), உச்சநீதிமன்ற கொலீஜியம், 103 விண்ணப்பதாரர்களில் 51 பேர் பெயரை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது.


இந்த 51 பேரில், 11 பேர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர். இருவர், பழங்குடியினர். 8 பேர் சிறுபான்மையினர். 6 பேர் பெண்கள். இந்த 51 பேரில், பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர்கள் இருவர் என்றும் தெரியவந்துள்ளது.


இந்த விவரங்களின் மூலம், மேல் ஜாதியினர், அதிக எண்ணிக்கையில் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்களுக்கு பரிசீலனை செய்யப்படுகின்றனர், நியமிக்கப்படுகின்றனர் என்ற கருத்தும், பிரசாரமும் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Advertisement