விளம்பரத்துக்காக மனு உச்ச நீதிமன்றம் அதிருப்தி

1

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சமீபத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணியர் மீது தாக்குதல் நடத்தியதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக, வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில், 'சுற்றுலா பயணியர் இவ்வளவு பெரிய அளவில் குறிவைக்கப்பட்டு கொல்லப்படுவது இதுவே முதல் முறை. எனவே, பயங்கரவாத தாக்குதலின் போது, சுற்றுலா பயணியரை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களை நீதிமன்றம் உருவாக்க வேண்டும்.

சுற்றுலா தலங்களில் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்புக்கு நிறுத்த உத்தரவிட வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தார். இந்த மனு, நீதிபதிகள் சூர்யா காந்த், கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'உங்கள் நோக்கம் என்ன? இந்த வகையான பொதுநல வழக்கு தாக்கல் செய்யும்படி யார் உங்களை துாண்டுகின்றனர்; சேவை செய்யும் நோக்கமின்றி விளம்பரத்திற்காக மட்டுமே பொதுநல வழக்குகள் தொடர்கிறீர்களா' என, நீதிபதிகள் காட்டமாக கூறினர். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement