போனில் பேசும்போது இம்சை மனைவியை கொன்ற கணவர் கைது

பசவேஸ்வராநகர்: மைத்துனரிடம் மொபைல் போனில் பேசியபோது, 'ஸ்பீக்கரை ஆன்' செய்ய கூறியதால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

பசவேஸ்வராநகரில் உள்ள தன் அலுவலகத்தில், பெங்களூரு மேற்கு மண்டல டி.சி.பி., கிரிஷ் நேற்று அளித்த பேட்டி:

பசவேஸ்வராநகர் மகாகணபதி நகரில் வாடகை வீட்டில் வசித்த நமீதா சாகு, 43, என்பவர், கடந்த மாதம் 24ம் தேதி, வீட்டில் இறந்து கிடந்தார். வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரில், பசவேஸ்வராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நமீதாவுக்கும், அவரது கணவர் லோகேஷ் குமார் கெலாட், 45, என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதும், இதனால் மனைவி கழுத்தை நெரித்து கொன்று விட்டு கணவர் தலைமறைவானதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

ராஜஸ்தானில் பதுங்கி இருந்த லோகேஷ் குமார் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை இங்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்.

கப்பன்பேட்டையில் உள்ள ஸ்டூடியோவில் லோகேஷ் குமார் வேலை செய்து வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க சென்றபோது, நமீதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 3 வயதில் மகள் உள்ளார்.

லோகேஷ் குமாருக்கு சொந்தமாக ஸ்டூடியோ துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த லோகேஷ் குமார், மனைவியின் சகோதரரிடம் மொபைல் போனில் பேசி உள்ளார்.

அப்போது ஸ்பீக்கரை ஆன் செய்து பேசும்படி மனைவி கூறி இருக்கிறார். இதற்கு லோகேஷ் குமார் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

கோபம் அடைந்த லோகேஷ் குமார், நமீதாவை கழுத்தை நெரித்துக் கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement