கப்பலுார் சேமிப்புக் கிடங்கில் ஏற்றுதல் இறக்குதல் பணி: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: கப்பலுார் சேமிப்புக் கிடங்கில் பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் பணியில் ஈடுபடுவதற்கு, மதுரை மாவட்ட டாஸ்மாக் சுமை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினருக்கு முன்னுரிமை அளிக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

சங்க தலைவர் மகாதேவன் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு கப்பலுாரில் 5 கிடங்குகள் உள்ளன. அவற்றில் சுமை துாக்கும் தொழிலாளர்கள் 3 கிடங்குகளில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நெல், பருப்பு வகைகள், மளிகைப் பொருட்கள், மதுபான பாட்டில்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் மூடைகள் வெவ்வேறு எண்கள் கொண்ட கிடங்குகளில் பாதுகாக்கப்படுகிறது.

ஒரு கிடங்கை திருமங்கலம் சேமிப்புக் கிடங்கு நிர்வாகம் குத்தகைக்கு எடுத்துள்ளது. அக்குறிப்பிட்ட கிடங்கில் கூரியர் பெட்டிகளை பாதுகாத்து ஏற்றி, இறக்கி வைக்க தனி நபர்களை ஈடுபடுத்த முயற்சிக்கிறது. எங்கள் உறுப்பினர்கள் 1999 முதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாம் தரப்பினரை ஈடுபடுத்துவதற்கு முன் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி வி.லட்சுமிநாராயணன்: முன்னுரிமை கோர இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் இருக்க வேண்டும். ஏற்றுதல், இறக்குதல் ஒப்பந்தம் முதலாளி, தொழிலாளிக்கு இடையிலானது. ஒப்பந்தத்தை நீதிமன்றம் எழுத முடியாது. மனுதாரர் சங்க உறுப்பினர்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது உண்மையாக இருக்கலாம்.

மனுதாரர் சங்க உறுப்பினர்களை அல்லது மூன்றாம் தரப்பினரை பணியில் ஈடுபடுத்த விரும்புகிறாரா என்பது திருமங்கலம் சேமிப்புக் கிடங்கு மேலாளரின் விருப்பத்திற்குட்பட்டது. மனுதாரருக்கு அத்தகைய உரிமையும் இல்லை அல்லது மேலாளருக்கு அதில் கடமையும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement