வீரபாண்டி திருவிழாவை முன்னிட்டு  போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

தேனி: 'வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன,' என எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : வீரபாண்டியில் நேற்று முதல் மே 13 வரை திருவிழா நடக்கிறது. இதனால் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றப்பட்டு உள்ளன.

குமுளியில் இருந்து தேனி வரும் வாகனங்கள் உப்பார்பட்டி விலக்கில் திருப்பப்பட்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பாலகிருஷ்ணாபுரம், கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதுார் வழியாக தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தடைய வேண்டும். அதேபோல் தேனி வழியாக குமுளி, கேரளா, கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் போடேந்திரம் விலக்கில் திருப்பப்பட்டு, சடையால்பட்டி, உப்புக்கோட்டை, கூலையனுார், குச்சனுார், மார்க்கையன்கோட்டை, சின்னமனுார் சென்று அங்கிருந்து குமுளி,கம்பம் மெட்டு வழியாக கேரளா சென்றடைய வேண்டும்.

குமுளி, கம்பத்தில் இருந்து வரும் வாகனங்கள் வீரபாண்டி தெற்கு பகுதி தற்காலிக பஸ் ஸ்டாண்டு எதிர்புறம் உள்ள காலியிடத்திலும், கவுமாரியம்மன் கோயில் மண்டபத்தின் எதிரே உள்ள காலியிடத்திலும் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களும், தெற்குப்புறம் உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டின் வடக்குப்புறத்தில் அமைந்துள்ள காலியிடத்தில் நான்கு சக்கர வாகன நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேனி சவுராஷ்டிரா கல்லுாரி எதிர்புறம் உள்ள இடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தலாம். தேனி, போடியில் இருந்து கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் அண்ணாமலை நகர், விஜயா கார்டன், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான காலியிடம், போடேந்திரபும் பைபாஸ் ரோடு சந்திப்பு, அருகிலும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரபாண்டி கிராமத்தில் இருந்து கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் வயல்பட்டி பைபாஸ் ரோடு சந்திப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். விதிமீறும் ஆட்டோக்கள், வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement