டிப்பர் லாரி மீது கார் மோதல்: பஞ்சாப் சாலை விபத்தில் 6 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் பலி

2

பாட்டியாலா: ஏழு மாணவர்களை ஏற்றிச் சென்ற கார், எதிரே வந்த டிப்பர் லாரியில் மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது. காரில் இருந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.


பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில் உள்ள பூபிந்தேரா சர்வதேச பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற இன்னோவா கார், சமனா என்ற பகுதியில் செல்லும் போது எதிரே வந்த டிப்பர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இன்று மாலை நடந்த இந்த சாலை விபத்தில் 6 பள்ளி மாணவர்களும் காரை ஓட்டிய டிரைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது. மற்றொரு மாணவர் பலத்த காயமடைந்தார்.


விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்த மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்த உடனேயே டிப்பர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.


இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.


பாட்டியாலா எஸ்.பி பல்விந்தர் சிங் சீமா கூறியதாவது:

மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. ஏழு மாணவர்கள் ஒரு இன்னோவா காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த கார் விபத்துக்குள்ளானதில் 6 பள்ளி மாணவர்களும் டிரைவரும் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஏழாவது பள்ளி மாணவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இன்னோவா கார், டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது. விபத்துக்கான காரணம் குறித்து, சி.சி.டி.வி., காட்சிகள் மற்றும் பிற விஷயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு பல்விந்தர் சிங் சீமா கூறினார்.

Advertisement