பாக்., மீது நடந்த தாக்குதல்: வீடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்

3

புதுடில்லி: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது , ஹிஜ்புல் முஜாகீதீன் பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு ' ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் பல வீடியோக்களை வெளியிட்டு உள்ளது.


அதில், முதலாவது வீடியோவில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி பகுதியில் உள்ள மார்கஜ் அப்பாஸ் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிகாலை 1:04 மணிக்கு துவங்கிய தாக்குதல் 1:30 மணி வரை நீடித்தது. இந்தமுகாமானது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படையாக மாறி தாக்குதல் நடத்த பயிற்சி பெற்றுள்ளனர். இங்கு 50க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறும் வசதி இருக்கிறது.


மற்றொரு வீடியோ 25 நிமிடங்கள் ஓடுகிறது. இதில், கோட்லியின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் குல்பூர் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச எல்லைக் கோட்டில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இந்த முகாம் அமைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைய காரணமான பூஞ்ச் தாக்குதல் சம்பவத்திற்கும் 2024 ஜூனில் யாத்ரீகர்கள் மீதும் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கும் காரணமான பயங்கரவாதிகள் இந்த முகாமில் தான் பயிற்சி பெற்றுள்ளனர்.


சர்வதேச எல்லையில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள சியால்கோட் பயங்கரவாத முகாமும், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் அழிந்தது. கடந்த மார்ச் மாதம் காஷ்மீர் போலீசாரை கொன்ற பயங்கரவாதிகள் இங்கு தான் பயிற்சி பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாபின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாமும் இந்தியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை. இங்கு பல முக்கிய பயங்கரவாதிகள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

அதேபோல் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் முரிட்கேயில் இருந்தது. இங்கு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான அஜ்மல் கசாப் மற்றும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி ஆகியோர் இங்கு தான் பயிற்சி பெற்றுள்ளனர்.


சர்வதேச எல்லையில் இருந்து 12 முதல் 18 கி.மீ., தொலைவில் இருக்கும் சியால் கோட்டின் மஹ்மூனா ஜெயா முகாமும் அளிக்கப்பட்டுள்ளது. இது ஹிஜ்புல் முஜாகீதீன்பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது. கத்துவா ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதம் பரவ இந்த முகாமும் ஒரு காரணம்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள முஜாபராபாத்தில் உள்ள சவால் நலா முகாமும் அழிக்கப்பட்டு உள்ளது. லஷ்கர் பயங்கரவாதிகளின் முக்கியமான பயிற்சி தளமாக இருந்தது.

முஜாபராபாத்தின் சைதீனா பெலால் முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு, பயங்கரவாதிகள் ஆயுதங்கள், வெடிபொருட்களை பயன்படுத்துவது குறித்தும், வனப்பகுதியில் பதுங்கி வாழ்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.


அதேபோல், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ள பிம்பெரில் செயல்பட்ட பர்னாலா பயங்கரவாத முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதங்களை கையாளுதல், ஐஇடி வெடிகுண்டுகளை தயாரித்தல் ஆகிய பயிற்சி இங்கு அளிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement