எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்


தரம்சாலா: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான மைதானம் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய அரசு, இன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதிலடி தாக்குதலை நடத்தியது.

நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் தகர்க்கப்பட்டு விட்டது. மேலும், 90க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பதில் தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய மாநிலங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஹிமாச்சலில் உள்ள தரம்சாலா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், தரம்சாலாவில் வரும் மே 11ம் தேதி நடைபெற இருந்த மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தரம்சாலாவுக்கு பதிலாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மும்பை அணி, மே 8ம் தேதி தரம்சாலா வருவதாக இந்த நிலையில், மாற்று பயண ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement