வந்தேபாரத் ரயிலுக்கு வந்த சோதனை; முறையாக பராமரிக்க வேண்டுகோள்

21

விருதுநகர் : வேகத்திலும், வசதியிலும் 'பிரீமியம்' ரயிலாகத்திகழும் வந்தே பாரத் ரயில்கள் கடந்த சில நாட்களாக தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன.


நாடு முழுதும் முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ., வரை செல்லும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் --- கோவை (8 பெட்டிகள்), கோவை --- பெங்களூரு (8), எழும்பூர் --- திருநெல்வேலி (16), எழும்பூர் --- நாகர்கோவில் (16), மதுரை --- பெங்களூரு (8) ஆகிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.


ஏ.சி., பெட்டிகள், விசாலமான ஜன்னல்கள், வசதியான இருக்கைகள், அலைபேசி சார்ஜிங் வசதி, தானியங்கி கதவுகள், சி.சி.டி.வி., கவாச் தொழில்நுட்பம், பயோ கழிப்பறைகள், சென்சார் வசதி கொண்ட தண்ணீர் குழாய்கள், பயணிகளுக்கான தகவல் அமைப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன.


கட்டணம் அதிகம் இருந்தாலும் விரைவான பயணம் என்பதற்காக பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதன் காரணமாக எழும்பூர்--- திருநெல்வேலி வந்தே பாரத் ஜன., 10 முதல் 8ல் இருந்து 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது.


நாட்டிலேயே 2வது அதிக துாரம் (724 கி.மீ.,) செல்லும் எழும்பூர் --- நாகர்கோவில் வந்தே பாரத் இன்று (மே 8) முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.


கடந்த சில நாட்களாக இவ்வகை ரயில்கள் தொழில்நுட்பக் கோளாறால் தாமதமாக பயணித்தன. மே 3ல் எழும்பூர் -- நாகர்கோவில் ரயில் (20627/20628) மூன்று மணி நேரம் தாமதமாக பயணித்தது.


மே 4ல் பெங்களூரு -- மதுரை ரயில் (20672) மின்சாரம் செயலிழப்பு காரணமாக ஒன்றரை மணிநேரம் நடுவழியில் நின்றது. கதவுகளை திறக்க முடியாமல் மூச்சுத்திணறலால் பயணிகள் அவதி அடைந்தனர். எழும்பூர் --- மதுரை தேஜஸ் ரயிலிலும் தானியங்கி கதவுகள் சில நேரங்களில் பழுதடைகின்றன.


பயணிகள் கூறுகையில், கூடுதல் கட்டணம் வசூலித்தும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமாகச் செல்வதை ஏற்க முடியாது. இந்த ரயில்களை ரயில்வே முறையாக பராமரிக்க வேண்டும், என்றனர்.

Advertisement