'நம்மை தாக்கியவர்களை மட்டுமே தாக்குவோம்'

நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவம் உள்ளிட்ட முக்கிய கட்டுமான அலுவலகங்களில் தாக்குதல் நடத்தப்படவில்லை.
கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போரில், இந்தியாவுடன் தோற்ற பின், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் தீவிரம் காட்டியது. பார்லிமென்ட் தாக்குதல், மும்பை, உரி, பதான்கோட் தாக்குதல், கடைசியாக பஹல்காம் தாக்குதல் என, 25 ஆண்டுகளில், 350க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் ராணுவத்தினரை பலி வாங்கினர்.
இதற்கெல்லாம் காரணம், ராணுவம், ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் பாக்., பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் தான். குறிப்பாக, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரில் தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்தின.
இந்த அமைப்பின் தலைவர்களான சையத் சலாஹுதீன், ஹபீஸ் சையது, மசூத் அசார் ஆகியோர், பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மசூதிகளில் பதுங்கியிருந்து, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்தனர். காஷ்மீர் இளைஞர்களையும், 'மூளைச் சலவை' செய்து தங்கள் அமைப்பில் சேர்த்துக் கொண்டனர்.
அஜ்மல் கசாப்
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் உயிரோடு பிடிக்கப்பட்டான். இவனிடம் இருந்து பெறப்பட்ட தகவலில், மும்பை தாக்குதலுக்கு காரணம், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் தலைவன் ஹபீஸ் சயீது, இப்போதும் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளான். தற்போது, பஹல்காமில் தாக்குதல் நடத்தியுள்ள தி ரெஸிஸ்டன்ட் பிரன்ட் அமைப்பு, லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பு தான்.
பாகிஸ்தானில் முரித்கே தைபா மார்கஸ் எனும் பயங்கரவாத பயிற்சி கூடத்தின் மீது இந்தியா நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஹபீஸ் சயீத்தால் 2000ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வளாகம், பயங்கரவாத அமைப்பின் பயிற்சி மற்றும் கருத்தியல் மையமாக உள்ளது. மும்பை தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.
--நமது நிருபர்-


மேலும்
-
சட்டென மாறிய வானிலை; சென்னையில் கொட்டிய பலத்த மழை
-
இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர்
-
வாட்ஸ் அப் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் ஆர்டர்; பெண் டாக்டர் கைது
-
பாக். பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம்: நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி
-
பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு!