ஆற்றலை பெருக்கும் சூரிய நமஸ்காரம்

நமது முன்னோர்கள் நமக்களித்த பொக்கிஷங்களில் ஒன்றான யோகாவில், இன்றைய அவசர உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும், யோகா குறித்து இனி வாரந்தோறும் வியாழக்கிழமை வெளிவரும் 'தினமலர்' நாளிதழின் விளையாட்டு பகுதியில் யோகாச்சாரியா டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி விளக்குகிறார்.

ஆற்றலை பெருக்கும் சூரிய நமஸ்காரம்

சூரியனின் 12 மாந்தரீக பெயர்களில் ஒன்று 'மித்ரா' இதன் பொருள் 'அனைவரின் நண்பன்' ஆகும். விடியற்காலையில் தோன்றும் சூரியனின் கதிர்கள் நோய்களை குணமாக்குவதோடு, உடலுக்கு புத்துணர்வை தரும். நாளமில்லா சுரப்பிகளின் ஆற்றலை பெருக்குகிறது. முக்கியமாக மூளையில் உள்ள பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் ஆற்றலை பெருக்குகிறது. கண் பார்வையின் நலன் பாதுகாக்கப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, மன உளைச்சலைப் போக்கி, மன அமைதி பெறச் செய்கிறது.

இதன் காரணமாகவே நம் இந்திய நாட்டில், பல நுாற்றாண்டுகளாக தினசரி காலை எழுந்ததும் சூரியனை வழிபட்டு வருகின்றனர். இதனையே சூரிய நமஸ்காரம் என்கிறோம்.

சூரிய நமஸ்காரத்தை முறையாக செய்தால், உடலின் நெகிழ்வு தன்மை கூடும். உள்ளுறுப்புகள் பலம் பெறும். சோம்பல் நீங்கி, உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறும். உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உணர்ந்து, முடிந்த அளவிற்கு நீட்டிவிட்டு, சீரான ஆழ்ந்த சுவாசத்துடன் செய்தால் ரத்த ஓட்டம் சீராகி, ஒவ்வொரு அணுவிற்கும் பிராண வாயுடன் புதிய ரத்தம் செலுத்தப்படும். இதனால், உடல் திறம்பட இயங்கும்.

சூரிய நமஸ்காரத்தை 10 நிலைகளின் செயல்முறை விபரம் வருமாறு:

தொடக்க நிலை



சமஸ்திதி ஆசனத்தில் நிற்கவும். உடலின் எடை இரு கால்களிலும் சமமாக செலுத்த வேண்டும். உள்ளங்கை, சூரியனை நோக்கி இருக்க வேண்டும். ஆழ்ந்து சுவாசித்தபடி, அதிகாலை சூரியனின் வெப்பம் உடல் முழுதும் படுவதை உணர்ந்து அனுபவிக்கவும்.

முதல் நிலை



ஆழ்ந்து சுவாசித்தபடி உள்ளங்கைகளை ஒரு பெரிய வட்டமாக்கிக் கொண்டு தலைக்கு மேலே நீட்டி ஒன்று சேர்க்கவும். பின்னர் கழுத்தை பின்னோக்கி வளைத்து உள்ளங்கைகளை பார்க்கவும். மேலே துாக்கிய கைகள், மொத்த உடலையும் மேலே துாக்குவது போல உணரலாம்.

இரண்டாம் நிலை



சுவாசத்தை சீராக வெளியிட்டு, உடலை நீட்டி கீழே குனிந்து, உள்ளங்கைகளை தரையில் படியும்படி வைத்து, தலை, கால் முட்டியை தொடும் நிலைக்கு (முட்டியை மடக்கக்கூடாது) வரவும். உள்ளங்காலை தரையில் அழுத்தி பதிக்கவும். இதுவே பாதஹஸ்த ஆசனம்.

மூன்றாம் நிலை



சுவாசத்தை உள்ளிழுத்து, கழுத்தையும், முதுகையும் நன்றாக நீட்டி, முடிந்த அளவிற்கு தலையை துாக்கி பார்க்கவும். உள்ளங்கைகளை முடிந்த அளவிற்கு தரையில் பதிய வைக்கவும். இது பாதஹஸ்த ஆசனத்தின் ஒரு மாறுபட்ட நிலை.

தொடர்ச்சி அடுத்த வாரம்...

Advertisement