'அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் பல்லடம் வரை நீட்டிக்க வேண்டும்' விவசாயிகள் வலியுறுத்தல்

பல்லடம் : 'அத்திக்கடவு- - அவிநாசி திட்டத்தை, பல்லடம் வரை நீட்டிக்க வேண்டும்,' என, பல்லடத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் கிராமத்தில், விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மூத்த விவசாயி சுப்பையன், விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி மற்றும் விவசாயிகள் பாலசுப்பிரமணியம், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுப்பையன் பேசியதாவது:

கடந்த காலத்தில், கிணற்று பாசனத்தில் விவசாயம் செய்து வந்தோம். இன்று, தண்ணீர் இல்லாமல் விவசாயம் முற்றிலும் அழிந்து வருகிறது. மிகவும் இன்றிமையாத குடிநீரை கூட விலைக்கு வாங்க வேண்டிய அவலம் உள்ளது. அரசின் தவறான வழிகாட்டுதலால், அட்சய பாத்திரமாக இருந்த கிணறுகள் வற்றி வறண்டு போக, போட்டி போட்டுக்கொண்டு ஆழ்துளை கிணறுகள் போட்டு வருகிறோம்.

ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீரை உறிஞ்சி விட்டால், நீர் எவ்வாறு பரவலாக செல்லும். நீர்நிலைகள் இதனால் முற்றிலும் அழிந்து வருகின்றன. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்றே தெரியவில்லை. ஆட்சியில் உள்ளவர்கள் இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் காலம் கடத்துகின்றனர். தமிழகத்தை விட குறைவான மழைப்பொழிவு கொண்ட இஸ்ரேல் நாட்டில், ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்ற சட்டம் உள்ளது. இதனால்தான் அந்த நாடு விவசாயத்தில் செழித்துள்ளது.

தமிழகத்தில், தண்ணீரே இல்லாத இடத்திலும் இலவச மின்சாரத்தை கொடுத்ததால் நாம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டோம். க வாழ்க்கையில் எத்தனையோ இழந்து விட்டோம். தண்ணீர் ஒன்றையாவது, நமது எதிர்கால சந்ததிகளுக்கு விட்டு செல்வோம். ஒரு காலத்தில் விவசாயத்தில் செழித்திருந்த பல்லடம் பகுதி, இன்று, தண்ணீருக்காக, மழையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டி இனி ஒரு பயனும் இல்லை. பல்லடம், மீண்டும் பழைய நிலைக்கு மாற வேண்டும் எனில், அத்திக்கடவு -- அவிநாசி திட்டத்தை, பல்லடம் வரை நீட்டிக்க வேண்டும். அல்லது, ஆனைமலையாறு- நல்லாறு

திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதற்காக, விவசாயிகள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி, ஒரு குடும்பமாக நாம் செயல்பட வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'தினமலர்' நாளிதழை

சுட்டிக்காட்டிய விவசாயிகள்'கடந்த காலத்தில், துாத்துக்குடி மாவட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் வருமானம் அளித்து வந்த பனைத் தொழில் அழிந்துவிட்டது. எதனால் என்பது, 2023 அக்., 8ம் தேதிய 'தினமலர்' நாளிதழில், விரிவான செய்தி வெளியாகியுள்ளது. அதுபோலத்தான் தற்போது பல்லடத்தின் நிலையும் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு செய்திகள் மூலம் நாளிதழ்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. ஆனால், நாம்தான் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை' என்று விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.

Advertisement