வளசரவாக்கத்தில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி

வளசரவாக்கம்:வளசரவாக்கம் மண்டலம் எஸ்.வி.எஸ்., நகரில் வளசரவாக்கம் ஏரி இருந்தது. ஆக்கிரமிப்புகளால் அழிந்த ஏரியின் மிஞ்சிய நீர்ப்பிடிப்பு பகுதி, சமீபத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
மழைக்காலத்தில் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைநீர் தேங்கி, எஸ்.வி.எஸ்., நகர் பிரதான சாலை மற்றும் அம்பேத்கர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும்.
மீட்கப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதியில், 4 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், எஸ்.வி.எஸ்., நகர் 1வது பிரதான சாலையில் இருந்து ஏரிக்கு செல்லும் பகுதி தனியார் நிலம் என்பதால், அவர்கள் சுற்றுச்சுவர் அமைத்து, சாலையில் இருந்து தண்ணீர் உள்ளே செல்லாத அளவிற்கு தடுப்புகள் அமைத்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை பெய்த கன மழையில் எஸ்.வி.எஸ்., நகர், 1வது பிரதான சாலையில் தேங்கி மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் குளம் போல் தேங்கியது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டனர். அதேபோல், வளசரவாக்கம், ஜெய் நகர் மற்றும் மாநகராட்சி நகர்ப்புற மருத்துவமனைக்கு செல்லும் மருத்துவமனை சாலையில், நாம் தமிழர் கட்சி அலுவலகம் முன் குளம் போல் மழைநீர் தேங்கின.