மறைமலை அடிகள் பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பல்லாவரம்,:பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மதுரை மாநகராட்சியின் வெள்ளிவீதியர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், ஹெச்.சி.எல்., பவுண்டேஷன் மற்றும் எஸ்.இ.டீ.டி., என்ற அமைப்பின் மூலம், 2021ம் ஆண்டு, இளைய கலாம் அறிவியல் மையம் துவக்கப்பட்டது.

இந்த மையத்தின் வாயிலாக, இதுவரை 20,000த்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, மதுரை, கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்டங்களில், கலெக்டர்களின் வழிகாட்டுதலின் கீழ், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், தலா 25 லட்சம் ரூபாய் செலவில், நான்கு புதிய அறிவியல் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களை சிறப்பாக வழிநடத்தும் நோக்கத்திலும், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டி கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் சார்ந்த திறன்களை மேம்படுத்தும் வகையிலும், மே 8 மற்றும் 9ம் தேதிகளில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி, பல்லாவரம் மறைமலை அடிகள் பள்ளியில் உள்ள இளைய கலாம் அறிவியல் மையத்தில் நடந்தது.

புதிதாக துவக்கப்பட்ட அறிவியல் மையத்தில் இருந்து, தலா ஐந்து ஆசிரியர்கள் என, 20 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, எஸ்.இ.டீ.டி., நிர்வாக இயக்குனர் அஜிங்கியா குல்கர்னி, பள்ளி தலைமை ஆசிரியர் ரவிகாசி வெங்கட்ராமன் மற்றும் ஆசிரியர்கள், அறிவியல் மையத்தை கையாளும் விதம் குறித்து பயிற்சி அளித்தனர்.

Advertisement