சிந்தனைக்களம்: ராணுவ நடவடிக்கை நிறுத்தம் ஏன்?

3

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நம் வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். அதற்கு அமெரிக்காவும், அதன் அதிபர் டிரம்பும் சொந்தம் கொண்டாடி உள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்ற சராசரி இந்தியனின் எண்ணவோட்டமும் மன உறுதியும் மெச்சப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும்.

அதே சமயம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான நமது எதிர் தாக்குதல் அளவுக்கதிகமாக இருக்காது என்பதை அரசு தற்போது தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

அதாவது, நாமாக தாக்க மாட்டோம், ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான நம் நியாயமான எதிர் தாக்குதல்களை பாகிஸ்தான் அதிகரிக்க முயன்றால் விட்டுக் கொடுக்க மாட்டோம், என்பதே நமது குறிக்கோளாகவே இருந்தது.

சுய கட்டுப்பாடு



கடந்த மூன்று நாள் ராணுவ தாக்குதலில் பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்துள்ளோம். இதற்கு பின்னரும் அவர்கள் வாலாட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான், நம் அரசு ராணுவ செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.

அதேசமயம், எப்போதெல்லாம் பாகிஸ்தான் நம்மிடம் வாலாட்டுகிறதோ, அப்போதெல்லாம் நாம் எதிரடி கொடுக்க தயாராகவே இருப்போம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம். இதுவும் நம் நாட்டின் இறையாண்மை குறித்த விஷயம். இதுவும் நம் நாட்டின் சுய கட்டுப்பாடு குறித்த முடிவு.

நம் நாட்டை பொறுத்தவரை பாகிஸ்தானிலோ, வேறு பிற நாடுகளிலோ அவசியம் இல்லாமல் தலையிடுவதில்லை. அவர்களை போரிலோ, பயங்கரவாத தாக்குதல்கள் வாயிலாகவே அடிபணிய வைக்க வேண்டும் என கருதியதில்லை.

இன்னும் சொல்லப்போனால், மஹாத்மா காந்தி கற்றுத்தந்த அமைதியும், அனுசரணையும் தான் சர்வதேச சமூகத்தில் நம் மூலதனமாக இருந்து வந்தது. தற்போதும் நம் வெளியுறவு துறை, செயல்பாடு மற்றும் உறவுகளில் அந்த தத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் தற்போதைய முடிவும் அதன் நீட்சியே.

பஹல்காம் பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பொதுவெளியில் அறிவித்தார்.

அதற்கு வழிவகை செய்யும் விதத்தில், நம் ராணுவத்திற்கு களநிலைமைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் சுதந்திரத்தை மத்திய அமைச்சரவை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதாவது, நம் முப்படை தலைமைகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தும் முன், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வர முயற்சி செய்யவேண்டும் என்ற கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு பிரதமரின் அறிவிப்பில் அடங்கி இருந்தது.

அவற்றின் உள் அர்த்தங்களை மேலைநாட்டு அரசு தலைமைகள் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல.

ஆனால் அவர்கள் செய்தது என்ன? நம் தலைமை அவர்களுக்கு அளித்த கால அவகாசத்தை தவறாக புரிந்துகொண்டு, இந்தியா வெறும் வெத்துவேட்டு என்று கருதி, அவர்கள் செயல்படாமல் இருந்தனர்.

மேற்கத்திய தலைவர்கள்



எனவேதான், தற்போது பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் இரவு முழுதும் பேசி ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்று மார் தட்டிக்கொள்ளும் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு தலைவர்கள், பாகிஸ்தான் தலைமையை ஒரு பிடி பிடிக்காமல் விட்டனர். இந்த மூன்று வார காலத்தில், எந்தவிதமான ராணுவ தாக்குதல்களுக்கும் மத்திய அரசு, தன்னையும், தன் படையினரையும், ஏன், நம் மக்களையும் தயார்படுத்திக் கொண்டது.

இது உறுதியான பின்பே அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் நிர்வாக தலைமைகள், தெற்காசியாவில் உள்ள இரு நாடுகளும் போரை தவிர்க்க வேண்டும் என அறிக்கைகள் வெளியிட்டன.

தற்போதைய பஹல்காம் தாக்குதல்களை விட்டுவிடுங்கள். கடந்த 1971 வங்கதேச விடுதலை போர் துவங்கியதில் இருந்து, மேற்கத்திய நாடுகள், இந்திய-ா - பாகிஸ்தான் விஷயங்களில் இரட்டை வேடமே போட்டு வந்துள்ளன.

மீனுக்கு தலையையும், பாம்பிற்கு வாலையும் காட்டும் அவர்களுடைய பழைய உத்திகளே தற்போதும் தொடர்ந்தது. இதன் காரணமாகவும், நம் அரசும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என்று முடிவு செய்தது.

இஸ்ரேலுக்கு உதவி



அந்த விதத்தில், மேலும் ஒரு முறை நம் நாடு, நம் இறையாண்மை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதை அரசு நிர்வாகம் மீண்டும் பறைசாற்றி உள்ளது.

இதே காரணங்களுக்காக அமெரிக்கா போன்ற நாடுகள் இப்போதும் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவும் ஆயுதங்களும் கொடுக்கின்றன.

எனவே, இந்தியாவிற்கு மட்டும் 'பொறுமை காக்க' கோரிக்கை வைப்பதற்கான தார்மிக உரிமையைக் கூட அமெரிக்கா இழந்தது.

தற்போதைய சூழலில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், 'மயிலே, மயிலே இறகு போடு' என்று நம் நாடு பாகிஸ்தானை கெஞ்சவில்லை என்பதையே நம் ராணுவ தாக்குதல்கள் நிரூபித்தன.

ராணுவ கட்டமைப்பு



அதே சமயம், எப்போது, நம் அரசும், ராணுவமும் திட்டமிட்ட அளவிற்கு பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தகர்த்து விட்டோமோ, அப்போதே நம் இலக்குகளை அடைந்து விட்டோம்.

இன்னும் சொல்லப்போனால், தன் ராணுவ கட்டமைப்பினுள் பெரிய ஓட்டை விழுந்துள்ளது என்று உணர்ந்துள்ள பாகிஸ்தானே, அமெரிக்கா வாயிலாக நம் நாட்டுடன் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளது எனலாம். இதுதான், கார்கில் போருக்கு பின்பும் நடந்தது.

அதே சமயம், நம் நாட்டில் உள்ள கடுமையான விமர்சகர்கள் நினைப்பது போல், நம் தற்போதைய ராணுவ நடவடிக்கைகளை முழு ஆயுதப் போராக அடுத்த கட்டங்களுக்கு எடுத்து சென்றிருப்போமேயானால், பாகிஸ்தானின் எதிர்வினை எதுவாக இருக்கும் என்று யூகிப்பதற்கு அதிக நேரம் பிடிக்காது.

தற்போது போன்றே தன் ராணுவ கட்டமைப்புகளை தொடர்ந்து தாக்குதல்களில் இழக்கும் அந்த நாடு, அணு ஆயுத தாக்குதல்கள் குறித்து யோசித்து பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

இரு நாடுகளுக்கிடையேயான அணு ஆயுத போரை நம் அரசும், மக்களும் விரும்ப மாட்டோம். அதற்காக போரிட மாட்டோம் என்பதல்ல பொருள். அதே சமயம், அணு ஆயுதம் இல்லாத போர் வாயிலாகவே நம் நாடு பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தி விட்டால், அந்த நாட்டையும், மக்களையும் வைத்து நாம் என்ன செய்ய முடியும்?

அதனால் ஏற்படும் மக்கள் தொகை குறித்த மாற்றங்களுக்கு என்ன தீர்வு? இரு நாட்டு பொருளாதாரமும் வீழ்ந்து, மேற்கத்திய நாடுகளின் ஆயுத நிறுவனங்கள் பகற்கொள்ளை அடிப்பதால் நமக்கு என்ன லாபம்?


இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான், நம் அரசும், ராணுவ நடவடிக்கைகளை முழு அளவிலான போராக மாற்றிவிடாமல் நம் இலக்குகளை அடைந்ததும், அளவோடு முடித்துக் கொள்ள சம்மதித்தது.-

என். சத்தியமூர்த்தி

சர்வதேச உறவு ஆய்வாளர்

Advertisement