கோப்பை வென்றது இந்தியா: பெண்கள் முத்தரப்பு ஒருநாள் தொடரில்

கொழும்பு: முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் அசத்திய இந்திய பெண்கள் அணி 97 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, கோப்பை வென்றது.
இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்றன. கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
மந்தனா அபாரம்: இந்திய அணிக்கு பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது பிரதிகா (30) அவுட்டானார். கேப்டன் சமாரி வீசிய 31வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய மந்தனா, ஒருநாள் போட்டியில் தனது 11வது சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய மந்தனா 116 ரன்னில் (2 சிக்சர், 15 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
ஹர்லீன் தியோல் (47), கேப்டன் ஹர்மன்பிரீத் (41), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ஓரளவு கைகொடுத்தனர். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 342 ரன் எடுத்தது. தீப்தி சர்மா (20) அவுட்டாகாமல் இருந்தார்.
கேப்டன் ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி (51), நிலக் ஷிகா (48), விஷ்மி (36), அனுஷ்கா (28), சுகந்திகா (27) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற இலங்கை அணி 48.2 ஓவரில் 245 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஸ்னே ராணா 4, அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் சாய்த்தனர்.
ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் மந்தனா (116 ரன்), தொடர் நாயகி விருதை இந்தியாவின் ஸ்னே ராணா (15 விக்கெட்) கைப்பற்றினர்.
ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை 102 போட்டியில், 11 சதம் அடித்துள்ளார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் மேக் லானிங் (15 சதம், 103 போட்டி), நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (13 சதம், 171 போட்டி) உள்ளனர்.
54 சிக்சர்
ஒருநாள் போட்டி அரங்கில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீராங்கனைகள் வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை (53 சிக்சர், 146 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார் மந்தனா. இதுவரை 102 போட்டியில், 54 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.
587 ரன்
நேற்று, இந்தியா (342), இலங்கை (245) அணிகள் இணைந்து 587 ரன் குவித்தது. இது, பெண்கள் ஒருநாள் போட்டி வரலாற்றில், இவ்விரு அணிகள் இணைந்து எடுத்த அதிகபட்ச ரன் ஆனது. இதற்கு முன், இத்தொடரில் லீக் போட்டியில் (மே 4) இவ்விரு அணிகள் இணைந்து 553 ரன் (இந்தியா-275, இலங்கை-278) எடுத்திருந்தன.
மேலும்
-
சென்னையில் பிரபல துணிக்கடையில் திடீர் தீ; அலறி ஓடிய ஊழியர்கள், பொதுமக்கள்
-
பாகிஸ்தானின் பொய் அம்பலம்: காஷ்மீரில் மக்கள் வசிப்பிடத்தில் வீசிய குண்டுகள் கண்டெடுப்பு
-
ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி விலக்கு: ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு
-
ஆபரேஷன் சிந்துார் :பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்
-
தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2360 சரிவு
-
என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..