குரங்குகள் தொல்லை; பொதுமக்கள் அவதி

மேட்டுப்பாளையம்; வீராசாமி நகரில் வீடுகளில் புகுந்து, உணவு பொருட்களை சேதம் செய்யும், குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமுகை அருகே ஜடையம்பாளையம் ஊராட்சியில் வீராசாமி நகர் குடியிருப்பு பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன. திறந்திருக்கும் வீடுகளில் புகுந்து, உணவுப் பொருட்களையும், துணிகளையும் குரங்குகள் சேதம் செய்து வருகின்றன.

இதுகுறித்து வீராசாமி நகர் மக்கள் கூறியதாவது: எங்கள் குடியிருப்பு பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வருகின்றன. வீடுகளில் கதவை திறந்து வைத்து, சமையல் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. கதவுகள் திறந்து இருந்தால், வீட்டின் உள்ளே குரங்குகள் புகுந்து, பொருட்கள் அனைத்தையும் சேதம் செய்து விடுகின்றன. சமையல் அறையில் புகுந்து உணவு பொருட்களை சாப்பிட்டும், சேதம் செய்து வருகின்றன. குழந்தைகள் கையில் வைத்திருக்கும் உணவு பொருட்களை, குரங்குகள் பிடுங்கி சாப்பிடுகின்றன. இந்த குரங்குகள் குழந்தைகளை கடித்து விடுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

துணிகள் துவைத்து காய வைத்தால், அந்த துணிகளை அங்கும் எங்கும், தூக்கி கீழே போட்டு விடுகின்றன. எனவே சிறுமுகை வனத்துறையினர் இப்பகுதியில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Advertisement