'டாஸ்மாக்'கில் குவிந்த 'குடி'மகன்களால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

அம்பத்துார்:மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு நடந்தது.

இதை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தடுக்க முக்கிய இடங்கள் மற்றும் மாநாட்டுக்கு செல்லும் வழிகளில் உள்ள மதுக்கடைகளை மூட, நேற்று முன்தினம் இரவு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில மதுக்கடைகளை தவிர மற்றவை மூடப்பட்டன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மதுக்கடைகளையும் மூட, திருவள்ளூர் கலெக்டர் நேற்று, வாய்மொழி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனரக பகுதியில், அயப்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் மதுக்கடைகள்திறந்திருந்தன.

இதனால் காலை முதலே, மதுப்பிரியர்கள் அனைவரும், திறக்கப்பட்ட ஒருசில மதுக்கடைகளை நோக்கி படையெடுத்தனர். அவர்கள், சாலையிலே வாகனங்களை நிறுத்தி சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த அம்பத்துார் மதுவிலக்கு போலீசார், அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

Advertisement