லாவோஸ் நாட்டில் தவித்த 10 தமிழக இளைஞர்கள் மீட்பு

திருச்சி ; தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காங்கில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களில் வேலை என்று கூறி, தமிழகத்தில் பல மாவட்டங்களை சேர்ந்த, 10 பேர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த புரோக்கர் வாயிலாக தாய்லாந்து சென்றனர்.

அங்கு, சில மாதங்கள் மட்டுமே அவர்கள் வேலை பார்த்துள்ளனர். பின், அந்த நிறுவனம், லாவோஸ் நாட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு, 10 பேரையும் விற்று விட்டனர். அந்த நிறுவனம், கிரிப்டோ கரன்சி முதலீடு, பெண்கள் போல சாட் செய்ய வைத்து மோசடி செய்வது உள்ளிட்ட ஆன்லைன் மோசடியில் தொடர்ந்து ஈடுபட வலியுறுத்தி உள்ளனர்.

இதில் விருப்பமில்லாத, 10 பேரும், லாவோஸ் நாட்டில் உள்ள இந்திய துாதரகத்தை அணுகி, தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

துாதரக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, 10 பேரும் நாடு திரும்ப உதவியுள்ளனர். மோசடி நிறுவனத்திடம் சிக்கிய விழுப்புரம் வரதராஜ், குணசேகரன் உட்பட 10 பேரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, தாய்லாந்தில் இருந்து விமானத்தில் திருச்சி அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார், நேற்று விசாரணை நடத்திய பின், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement