ஓடும் காரில் சிறுமி பலாத்காரம் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஓடும் காரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதுடன், உடன் இருந்த மற்றொரு பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு ஒரு கும்பல் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உ.பி.,யின் நொய்டாவிலிருந்து, 17 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று பேர் அடங்கிய கும்பல், கடந்த 7ம் தேதி காரில் அழைத்துச் சென்றது. வழியில் அந்த கும்பலைச் சேர்ந்த மூவரும் மதுபானம் வாங்கி குடித்தனர்.
அதன்பின் காரில் மீரட் நோக்கிச் சென்றனர். கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சிறுமி மற்றும் இளம்பெண்ணிடம் மூன்று பேரும் அத்துமீற முயற்சித்தனர்.
இதனால் காருக்குள் மோதல் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், இளம்பெண்ணை ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டனர்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு வாகனம் மோதி, இளம்பெண் உயிரிழந்தார். இதையடுத்து காரை மீரட் நோக்கி செலுத்திய அவர்கள், காரின் உள்ளே வைத்து சிறுமியை இரவு முழுதும் பலாத்காரம் செய்தனர்.
அவர்களிடம் இருந்து மறுநாள் காலை சிறுமி தப்பித்தார். நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து வெள்ளை நிற கியா செல்டோஸ் காரை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டனர்.
புலந்த்ஷஹர் - அலிகார் நெடுஞ்சாலையில் அந்த கார் சென்றது போலீசுக்கு தெரிந்தது. அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து காரை மறித்தனர். காரில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர்.
அவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில், மூன்று பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. விசாரணையில், குற்றவாளிகளில் இருவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சந்தீப், அமித்.
மற்றொருவர் காஜியாபாதைச் சேர்ந்த கவுரவ் என்பது தெரிந்தது. மூவர் மீதும் கொலை, ஆள் கடத்தல், பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.



மேலும்
-
மின் இணைப்பு வழங்க லஞ்சம்; இன்ஜினியருக்கு 4 ஆண்டு சிறை
-
கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
-
செயற்கைக்கோள் தயாரிப்பு; தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ கெடு
-
அ.தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம் 'மாஜி' அமைச்சர் சம்பத் துவக்கி வைப்பு
-
சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு
-
இடம் வழங்காததால் தண்ணீர் பிரச்னை; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்