செயற்கைக்கோள் தயாரிப்பு; தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ கெடு

புதுடில்லி : ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியை ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடித்து தரும்படி தனியார் விண்வெளி ஒப்பந்த நிறுவனங்களுக்கு இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது.


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோ உடன் இணைந்து செயற்கைக்கோள் உருவாக்கம் உட்பட பல்வேறு பணியில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.


இதில், தெலுங்கானாவின் ஹைதராபாதை சேர்ந்த, 'அனந்த் டெக்னாலஜீஸ்' கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த, 'சென்டம் எலக்ட்ரானிக்ஸ், ஆல்பா டிசைன் டெக்னாலஜீஸ்' ஆகிய நிறுவனங்கள் ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.


இத்திட்டத்தின் கீழ், 52 கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட உள்ளன. இதில், 31 செயற்கைக்கோள்களை உருவாக்கும் ஒப்பந்தம், இந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக செயற்கைக்கோள் உருவாக்கும் பணிக்கு, நான்கு ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்படும்.


தற்போது இந்தியா - பாக்., இடையே நீடித்து வரும் பதற்றத்தை தொடர்ந்து, இந்த கால அவகாசத்தை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரோ குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கண்காணிப்பு செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை விரைவில் முடிக்கவும் அந்த மூன்று நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement