வீடு புகுந்து 10 சவரன் திருட்டு ஆந்திர கொள்ளையன் கைது

சென்னை:அரும்பாக்கம், விநாயகபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், 37; தனியார் நிறுவன ஊழியர். இவர், மார்ச் 18ம் தேதி மகளை பள்ளியில் விட்டு, மனைவியுடன் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாய், அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று திரும்பினார்.

இந்த இடைபட்ட நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 10 சவரன் நகை, 9,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி தப்பியுள்ளனர். இது குறித்து, சூளைமேடு போலீசார் விசாரித்தனர்.

இதில், ஆந்திர மாநிலம் விஜயவாடா, பட்டமடா பகுதியைச் சேர்ந்த கொள்ளையன் சத்யாலா அஜய், 25, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலத்திற்கு சென்று சத்யாலா அஜயை பிடித்து விசாரித்தனர். அவர், குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட சத்யாலாவின் பாட்டி ஓய்வு பெற்ற நீதிபதி என்பதும், இதனால் சத்யாலா அஜய் வழக்கறிஞர்கள் பலருடன் பழக்கத்தில் இருந்துள்ளார். அப்போது, நீதிபதி ஒருவரது வீட்டில் 81 லட்சம் ரூபாய் திருடிய வழக்கில், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சத்யாலா அஜய் மீது, ராஜமுந்திரி காவல் நிலையத்தில், 14 வழக்குகளும், மற்ற காவல் நிலையங்களில், ஏழு வழக்குகளும் உள்ளன. திருடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர், கோவா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

விசாரணை முடிந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement