பெயர்ந்துள்ள சிமென்ட் தளம் நடைபயிற்சி செய்வோர் சிரமம்

வண்டலுார்:வண்டலுார் ஏரி ஓரம் உள்ள நடைமேடை சிமென்ட் சட்டங்கள், பல இடங்களில் பெயர்ந்து, விலகிக் கிடப்பதால், நடைபயிற்சி செய்வோர் சிரமமடைகின்றனர்.

வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஓரம் வண்டலுார் ஏரி உள்ளது. கடந்த 1990களில், 150 ஏக்கர் பரப்பில் இருந்த ஏரி, தொடர் ஆக்கிரமிப்பினால், தற்போது 80 ஏக்கர் பரப்பில் சுருங்கி விட்டது.

கடந்த 2010ல், வண்டலுார்- - மீஞ்சூர் இடையே 62 கி.மீ., தூரத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்கும் பணி, 2,156 கோடி ரூபாயில் துவக்கப்பட்டபோது, இந்த ஏரியின் ஒரு பக்கம் 500 மீ., துாரத்திற்கு அணுகு சாலை அமைக்கப்பட்டது.

பின், அணுகுசாலைக்கும் ஏரிக்கும் இடையே, வடிகால் அமைக்கப்பட்டு, நடைபயிற்சி செல்வோருக்காக, அந்த வடிகாலின் மேல் சிமென்ட் சட்டங்கள் பொருத்தப்பட்டன.

இந்த சிமென்ட் சட்டங்கள் முறையாக பொருத்தப்படாததால், நாளடைவில், பிணைப்புகள் விலகத் துவங்கின. தற்போது, 50க்கும் மேற்பட்ட இடத்தில், சிமென்ட் சட்டங்கள் விலகி, பெரும் பள்ளங்களாக உள்ளன.

இதனால், நடைபயிற்சி செய்வோர், சிமென்ட் சட்டங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் காலை நுழைத்து, விபத்தை சந்திப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, இணைப்புகள் விலகிக் கிடக்கும் சிமென்ட் சட்டங்களை முறையாக இணைத்து, வலுவான, பாதுகாப்பான நடை பாதையை உருவாக்கிட வேண்டும் என, நடைபயிற்சி செய்வோரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement