இன்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!

14

சென்னை: தமிழகத்தில் வெவ்வேறு ஊர்களில் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி, வி.ஏ.ஓ.,க்கள் இருவர் என மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.



லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலர் கைது


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் திருவேங்கடம் தாலுகா செவல்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்துள்ளார். அவர் அந்த பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கேட்டு பள்ளியின் தாளாளரான நாகராஜ் என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார்.

பணி அனுபவ சான்றிதழை தாளாளர் நாகராஜன் தயார் செய்துவிட்டு, தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளார். இதையடுத்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தாளாளர், லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.


இதையடுத்து, பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ. 60,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரை, 52, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


கிராம நிர்வாக அலுவலர் கைது

பெரம்பலுார் மாவட்டம் குன்னம் அருகே, பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரியம்மாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி, 35, விவசாயி. அவரது நிலத்துக்கு கூட்டுப்பட்டா உள்ளது. அவரது நிலத்துக்கு தனி பட்டா வழங்க வி.ஏ.ஓ.,விடம் மனு அளித்தார். அதற்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று வி.ஏ.ஓ., அன்பழகன் கேட்டார்.
அப்படி லஞ்சம் வாங்கிய அன்பழகனை, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஹேம சித்ரா தலைமையிலான போலீசார், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தவணை முறையில் லஞ்சம்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் வி.ஏ.ஓ., சரவணன், பட்டா பெயர் மாறுதல் செய்வதற்கு 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். நேற்று GPay மூலம் ஆயிரம் ரூபாய் பெற்ற நிலையில் இன்று நேரடியாக 2,000 ரூபாய் பெற்றார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement